ஐசிசி வெளியிட்ட வீடியோ தோனியின் பிறந்தநாளுக்கா? ஓய்வுக்காகவா? - ரசிகர்கள் குழப்பம்
ஐசிசியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ தோனியின் ஓய்வை குறிக்கிறதா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஐசிசியின் ட்விட்டர் பக்கத்தில் இன்று தோனி குறித்த வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதாவது, ''இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி என்பது வெறும் பெயரல்ல, அது இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியது. அது உலக அளவில் பலருக்கும் முன்னுதாரணமாய் விளங்கியது. அது மறுக்க முடியாத மரபு கொண்ட பெயர்'' என்ற தலைப்புடன் ஐசிசி ஒரு வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி, மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் எனப் பலரும் தோனி குறித்து தங்களது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ பதிவுக்கு தோனியின் ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஐசிசியின் வீடியோ பதிவு சில ரசிகர்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில ரசிகர்கள் இது தோனியின் பிறந்தநாளிற்கான வீடியோ என்று பதிவிட்டுள்ளனர். மற்றும் சில ரசிகர்கள் இது தோனியின் ஓய்விற்கான சமர்பண வீடியோவா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். மேலும் பலர் ஏதற்காக ஐசிசி இந்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
அத்துடன் சிலர் தோனி தற்போது ஓய்வு அறிவிக்க போகிறாரா என்று கூறி சோகமான எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் ஒரு ரசிகர், ஐசிசியின் இந்த ட்வீட்டின் மூலம் தோனியின் ஓய்வு கிட்டதட்ட உறுதியாகவிட்டது எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு பதலளித்து அவ்வாறு அறிவிப்பு வரும் பட்சத்தில் நாங்கள் மிகவும் அழும் தருணம் ஏற்படும் எனக் கூறி சோகமான படங்களை பதிவிட்டு வருகின்றனர்.