கிரிக்கெட் வடிவத்தின் பொக்கிஷம் “டெஸ்ட்” மேட்ச் - சீட் நுனியில் அமரவைத்த டாப் 5 போட்டிகள்!

கிரிக்கெட் வடிவத்தின் பொக்கிஷம் “டெஸ்ட்” மேட்ச் - சீட் நுனியில் அமரவைத்த டாப் 5 போட்டிகள்!
கிரிக்கெட் வடிவத்தின் பொக்கிஷம் “டெஸ்ட்” மேட்ச் - சீட் நுனியில் அமரவைத்த டாப் 5 போட்டிகள்!

உலக அரங்கில் டி20 போட்டிகளின் மோகம் பெருகிவரும் காலகட்டத்தில், டெஸ்ட் போட்டியானது இன்னும் தன் இருப்புநிலையையும், அழகியலையும் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு எடுத்துரைத்துக்கொண்டே இருக்கிறது என்றால் மிகையாகாது.

மனிதனின் இயல்புநிலையானது காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே வருகிறது. நாகரீக மாற்றம் என்பது ஆடை, உணவு, வாழ்க்கைமுறை என்பதை எல்லாம் தாண்டி விளையாட்டுகளிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால், அது முற்றிலும் உண்மையானது என்று தான் சொல்லவேண்டும். தற்போதைய மனிதர்களின் மனநிலையானது முன்னேற்றத்தின் விபரீதமாக, எந்தஒரு விசயத்தை எடுத்துக்கொண்டாலும், சீக்கிரம் அதை செய்து முடிக்க வேண்டுமே, அந்த வேலை விரைவாக நடந்தால் தான் என்ன, இன்னும் இது முடிவுக்கே வரவில்லையா என்பதை போல், ஒவ்வொரு விசயத்திற்குமான விடைகளையும், பதில்களையும் உடனடியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற மனப்போக்கே பெருகியுள்ளது. விரைவாகவும், ருசியாகவும் இருக்க வேண்டும் என்ற மனப்போக்கின் காரணமாக பெருகிவிட்ட துரித உணவுகளை போலவே, கிரிக்கெட் விளையாட்டிலும் டி20 போட்டிகளின் மோகம் பெருகிவிட்டிருக்கின்றன. ஆனால் அது ஆரோக்கியமான ஒன்று தானா? என்றால், நிச்சயம் இல்லை என்ற பிரதான குரலே ஓங்கியிருக்கும். ஏனென்றால் கிரிக்கெட்டில் டெஸ்ட் வடிவம் என்பது, அந்தளவு ஆரோக்கியமானதாகும்.

குறுகிய வடிவ போட்டிகளின் மீதான மோகம் பெருகிவிட்ட இந்த காலகட்டத்திலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தொடர்ந்து தன் இருப்பை நிலைநிறுத்திகொண்டே தான் இருந்து வருகிறது. அதற்கு பெரிய உதாரணமாகவே அமைந்துள்ளது, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்து முடிந்துள்ள போட்டி. அதற்கு காரணம் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி பெற்ற வெற்றி. இங்கிலாந்து அணியின் ”பேஸ்பால்” அணுகுமுறை என்பது, அதிக கேள்விகளுக்கு ஆட்படுத்தும் ஒன்றானது என்பதை இந்த போட்டியானது நிரூபித்து காட்டியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முக்கியத்துவத்தையும், அது எந்தளவு அழகியலையும், உணர்ச்சிபெருக்கையும் கொண்டுள்ளது என்பதை பற்றியும் விவரிக்கும் ஒரு தொகுப்பாகவே இந்த பதிவு நீள்கிறது.

2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நிர்ணயித்த போட்டி! ( 2005-Aus VS Eng)

1 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டெஸ்ட் போட்டிகள் தற்போது 2 முறை நிகழ்த்தப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இந்த போட்டியானது, உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும், நீங்காத இடத்தில் எப்போதும் நிலைத்திருக்கும். ஆஸஸ் டெஸ்ட் தொடரில் ஒரு சுவாரசியமான போட்டியை கண்ணை மூடி சொல்லுங்கள் என்றால், எல்லோர் நினைவிலும் இந்த ஒரு டெஸ்ட் போட்டி தான் முதலில் வந்து நிற்கும். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 2ஆவது டெஸ்ட் போட்டியில் மட்டும் இங்கிலாந்து அணி 2 ரன்களில் வெற்றிபெறாமல் போயிருந்தால், தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி சென்றிருக்கும்.

2005ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது ஆஸ்திரேலிய அணி. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஸஸ் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியை க்ளென் மெக்ராத்தின் மேஜிக் பந்துவீச்சால் அவர் வீழ்த்திய 9 விக்கெட்டுகளால், 239 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியிருக்கும். இந்நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, 2ஆவது இன்னிங்ஸில் போட்டியை வெற்றிபெற ஆஸ்திரேலியாவிற்கு 282 ரன்கள் இலக்கை நிர்ணயிக்கும். இங்கிலாந்தின் அற்புதமான பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலிய பேட்டர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, 175 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா. அப்போது 9ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஷேன் வார்ன் மற்றும் பிரெட்லீ இருவரும், 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு போட்டியை 220 ரன்களுக்கு எடுத்துவருவர்.

220-9 விக்கெட்டுகளை இழந்த பின்னர் இங்கிலாந்து எளிதாகவே போட்டியில் வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்மசொப்பமானக விளையாடினர், இரண்டு டெய்ல் எண்டர் பேட்ஸ்மேன்கள். பிரெட்லீ உடன் கைக்கோர்த்த மைக்கேல் காஸ்ப்ரோவிக்ஸ்-ம் அதிரடியாக விளையாட வெற்றிக்கு தேவையான 279 ரன்களுக்கே எட்டிவிடுவர் இரண்டு வீரர்களும். இன்னும் 3 ரன்கள் தான் வெற்றிக்கு தேவையென்ற இடத்தில், ஒரு விக்கெட்டை வீழ்த்துவதற்காக போராடிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஹர்மிசன், குட்லெந்த் டெலிவரியில் அற்புதமான பவுன்சரை வீச, அதை தொடுவதற்கு போய் பேட்டை எடுத்த மைக்கேல் காஸ்ப்ரோவிக்ஸ், விக்கெட் கீப்பர் ஜோன்ஸ் இடம் கேட்ச்சை கொடுத்து மாட்டிக்கொள்வார். அதை கொஞ்சம் கூட எதிர்பாராத இங்கிலாந்து அணி, வெற்றியின் களிப்பில் கத்திக்கொண்டு மகிழ்ச்சியை கொண்டாடினர். யார் வெற்றிபெறப்போகிறார்கள் என கடைசி நிமிடம் வரை சீட்டின் நுனியிலேயே வைத்திருந்த இந்த போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் காலத்திற்கும் அழியாத ஒரு போட்டியாக நிலைத்திருக்கும்.

*1 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டிஸ்! ( 1993-Aus VS WI)

அப்போதைய வலுவான இரண்டு பெரிய அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்த போட்டியானது, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முதலில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தீர்மாணித்த போட்டியாக இடம்பெற்றது. இரண்டு அணியிலும் ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் இருந்ததால், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது, கடைசிவரை யாருக்கு செல்லப்போகிறது என்பது, 5ஆவது டெஸ்ட் போட்டிவரை நீடித்து கொண்டே இருந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது வெஸ்ட் இண்டிஸ் அணி. முதல் மூன்று போட்டிகளை பொறுத்தவரை டிரா, ஆஸ்திரேலியா வெற்றி, டிரா என நீடித்திருந்த நிலையில், 4ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டிய ஆஸ்திரேலியாவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன்செய்யும் ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி. 2ஆவது இன்னிங்ஸில் வெற்றிபெற 186 ரன்கள் தேவையான இடத்தில், வெற்றியை ஆஸ்திரேலியாவிற்கே தேடித்தரவேண்டும் என்ற வெறியோடு, ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் 3ஆவது வீரராக களமிறங்கி போட்டியின் இறுதிவரை களத்தில் நின்று விளையாடுவார், ஜஸ்டின் லாங்கர். லாங்கர் விக்கெட்டை கைப்பற்றும் வரை இந்த போட்டியில் தாங்கள் இல்லை என்றே பந்துவீசி வந்தனர், வெஸ்ட் இண்டிஸ் பந்துவீச்சாளர்கள்.

ஆஸ்திரெலிய அணி 144 ரன்களில் 8 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில், அரைசதம் அடித்து களத்தில் நிலைத்திருந்தார் லாங்கர், பிசப் வீசிய பந்தில் ஒருவழியாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 54 ரன்களில் வெளியேறுவார். இந்நிலையில் அடுத்த விக்கெட் சுலபமாக வீழ்ந்துவிடும் என்ற நிலையில், இறுதியாக கைக்கோர்த்த டிம் மே மற்றும் க்ரைக் மெக்டெர்மோட் இருவரும் அற்புதமாக விளையாடி போட்டியை வென்றுகொடுக்கும் முனைப்பில் பவுண்டரிகளாக அடித்துக் கொண்டிருந்தனர். வெற்றிக்கு இன்னும் இரண்டு ரன்களே தேவை என்ற இடத்தில், அவ்வளவு தான் போட்டியில் ஆஸ்திரேலியா தான் வெற்றிபெற்றுவிடும் என நினைத்த கனத்தில், வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரீவ் வால்ஸ் ஒரு மேஜிக் பந்தை வீச, விக்கெட் கீப்பரிடம் சிக்கிக்கொள்வார் 11ஆவது வீரரான வால்ஸ். இந்நிலையில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி என்ற வரலாற்று நிகழ்வை நிகழ்த்தி காட்டியது வெஸ்ட் இண்டிஸ். தொடரை சமன் செய்ததும் இல்லாமல், அடுத்த போட்டியிலும் வெற்றிபெற்று ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் வெஸ்ட் இண்டிஸ் அணி.

போட்டியை விட்டுகொடுக்காமல் 1 விக்கெட் வித்தியாசத்தில் தனி ஒரு ஆளாய் வென்ற பென் ஸ்டோக்ஸ்! ( 2019-Aus VS Eng)

1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பல டெஸ்ட் போட்டிகள் வெற்றிபெற்றிருந்தாலும், பென் ஸ்டோக்ஸ் ஆடிய இந்த போட்டியானது தனித்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஒரு அணி மீண்டுவந்து போட்டியை வெற்றிபெற்றது என்றால், அசாத்தியமான ஒன்று என்று தான் சொல்லவேண்டும். அதை களத்தில் நிகழ்த்தி காட்டினார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். பல சுவாரசியமான டெஸ்ட் போட்டிகளை கொண்டிருந்த ஆஸஸ் தொடரானது, மீண்டும் ஒரு அற்புதமான போட்டியை தனக்குள் அணைத்துக்கொண்டது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது, முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி, டிரா என்று இருந்த நிலையில், 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் கையிலிருந்த போட்டியை தனி ஒரு வீரனாக, பறித்து கொண்டுவந்தார் பென் ஸ்டோக்ஸ். ஒருவேளை இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றிருந்தால், தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி இருக்கும். 286 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, கடைசி விக்கெட்டுக்கு 76 ரன்களை சேர்த்து வெற்றிபெறும். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், டெய்ல் எண்டரை பேட்டிங் செய்யாமல் தடுத்து தடுத்து அதிக பந்துகளை பென் ஸ்டோக்ஸே எதிர்கொண்டார். அவரின் இந்த திட்டத்தை ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர்களால் கடைசிவரை தடுத்து நிறுத்தவே முடியவில்லை. 11ஆவது வீரராக களமிறங்கிய ஜேக் லீச், வெறும் 17 பந்துகளை மட்டுமே சந்தித்திருந்தார். இறுதிவரை களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் விளாசி 135 ரன்களை குவித்திருந்தார்.

32 வருடங்களாக தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலிய கோட்டையை தகர்த்த ரிஷப் பண்ட்! ( 2020-2021 Aus VS Ind)

2020-2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்தியாவின் டெஸ்ட் தொடர் முழுவதுமே, டெஸ்ட் கிரிக்கெட் ஒரு பொக்கிஷம் என்பதற்கான எடுத்துக்காட்டான ஒன்றாக இருந்தது என்று கூறினால் மிகையாகாது. ஏனென்றால் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய ஒரு அணி, கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான தோல்வியை மறக்கடிக்கச் செய்யும் ஒரு தொடர் வெற்றியை மீண்டெழுந்து அடைந்ததென்றால் அதை எப்படி வார்த்தையால் சொல்ல முடியும். இதிலும் இந்த தொடர் முழுக்க இந்திய அணியின் நட்சத்திர பேட்டர்களான விராட் கோலி, கேஎல் ராகுல், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சமி போன்ற எவரும் அணியில் இடம்பெறாமல் இருந்தனர்.

இந்தியாவின் இளம்படை ஒரு அசாத்தியமான ஒன்றை நிகழ்த்தி காட்டி, ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்தது. 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இருந்த வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக, இந்தியாவின் புஜாரா, அஸ்வின், ஹனுமா விகாரி முதலிய வீரர்கள், ஆஸ்திரேலிய அணியினரின் பவுன்சர்களை உடல் முழுக்க வாங்கிக்கொண்டு 3ஆவது டெஸ்ட் போட்டியை காப்பாற்றி தந்தனர். இந்நிலையில் 1-1 என சமனில் இருந்த தொடர் யாருக்கு என்று தீர்மாணிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியானது, 32 வருடங்களாக எந்த அணியாலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தவே முடியாத கப்பா, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு சில நொடிகள் இருக்கும் வரை 2-1 என ஆஸ்திரேலியா தான் தொடரை வெல்லப்போகிறது என்று அனைவரும் கணித்திருந்தனர். ஆனால் அதை மாற்றியமைக்கும் முயற்சியில் இருந்தனர், இந்திய அணியின் இளம் வீரர்கள்.

வெற்றிக்காக 327 ரன்களை துரத்திய இந்திய அணி, 265 ரன்கள் இருந்த நிலையில் டாப் ஆர்டர்கள், மிடில் ஆர்டர்கள் என அனைவரது விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. களத்தில் இருக்கும் ஒரே முழுமையான பேட்டர் ரிஷப் பண்ட் மட்டுமாகவே இருந்தார். அந்த நிலையில் எந்த வீரராக இருந்தாலும், தன்னுடைய விக்கெட்டை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, எதிரில் இருக்கும் வீரரை அடித்து ஆட சொல்லி போட்டியை தக்கவைக்கும் மனநிலையிலேயே இருந்து இருப்பார்கள். ஆனால் போட்டியின் அழுத்தத்தை திறம்பட கையாண்ட இளம் வீரரான ரிஷப் பண்ட், விக்கெட்டையும் காப்பாற்றிக்கொண்டு அதிரடியான பேட்டிங்கையே வெளிப்படுத்தினார். கடைசி 30 ரன்கள் இருந்த நிலையில் டெய்ல் எண்டர்களும் அவுட்டாகி வெளியேற, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், 32 வருடங்களாக தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலியாவின் கோட்டையான கப்பாவின் வரலாற்றை முடிவுக்கு கொண்டுவந்து, இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தந்தார். 36க்கு ஆல் அவுட் என்ற மோசமான ஸ்கோரை வெளிப்படுத்திய இந்திய அணி, ஒரு அசாத்தியமான தொடர் வெற்றியை ஆஸ்திரேலியாவில் பதிவு செய்தது.

6 மணி நேரம் 297 பந்துகளை சந்தித்து போராடிய ஏபிடி வில்லியர்ஸ்! ( 2015-Ind VS SA)

அதிவேக அரைசதம், அதிவேக சதம், அதிவேக 150 என குறைந்த பந்துகளில் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டு, சாதனை மேல் சாதனை படைத்திருந்த ஒரு அதிரடி வீரர். தன் அணியின் தோல்வியை தடுப்பதற்காக 6 மணி நேரமாக களத்தில் நின்று, 297 பந்துகளை சந்தித்தார் என்றால் நம்ப முடிகிறதா. அதை கண்முன் செய்து காட்டினார் தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஏபிடி வில்லியர்ஸ்.

போட்டியை டிராவிற்கு கொண்டு செல்வதற்கான அவரது முயற்சி, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில், 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. 297 பந்துகளை சந்தித்திருந்த அவருடைய விக்கெட்டை கைப்பற்ற முடியாமல், இந்தியாவின் நட்சத்திர ஸ்பின்னரான அஸ்வின் கூட தோல்வியையே கண்டிருந்தார். 6 மணி நேர போராட்டத்திற்கு அஸ்வின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறுவார் டிவில்லியர்ஸ். 150+ ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்யக்கூடிய அதிரடியான வீரரின் ஸ்டிரைக் ரேட், அந்த போட்டியில் வெறும் 14ஆக இருந்தது எல்லோரையும் வியப்பிற்குள்ளேயே தள்ளியது. டிவில்லியர்ஸ்ஸின் தீரத்தை கண்டு வியந்த இந்திய அணி வீரர்கள் மட்டுமில்லாமல், மைதானத்தில் அமர்ந்திருந்த ஒட்டுமொத்த ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி விடைகொடுத்தனர்.

1999-இந்தியா பாகிஸ்தான் சென்னை டெஸ்ட் போட்டி, 2007 இந்தியா ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் தொடர், 1998-இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா டிரா போட்டி என தொடங்கி, தற்போது நடைபெற்றிருக்கும் இங்கிலாந்து, நியூசிலாந்து 1 ரன் வெற்றி போட்டிவரை, டெஸ்ட் போட்டியானது கிரிக்கெட்டின் ஒரு பொக்கிஷமான வடிவமாகவும், ஆரோக்கியமான ஒன்றாகவும் இன்றும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டே வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com