தொடரை வெல்லப்போவது யார்? டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்தியா!

தொடரை வெல்லப்போவது யார்? டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்தியா!
தொடரை வெல்லப்போவது யார்? டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்தியா!

இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், கடந்த 2ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்களில் திரில் வெற்றிபெற்றது. ஜனவரி 5ஆம் தேதி புனேயில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய அணி 16 ரன்களில் இலங்கையிடம் வீழ்ந்தது. இந்த தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் வீசிய நோ பால்களும் விமர்சனத்தை எழுப்பின. அந்தப் போட்டியில் அவர் 5 நோ பால்களை வீசியிருந்தார்.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜனவரி 7) ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ஜெயிக்கும் அணியே, டி20 கோப்பையைக் கைப்பற்றும் என்பதால் இந்தப் போட்டி இவ்விரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்படி, இன்றைய போட்டியில் இந்தியா டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து உள்ளது. இன்றைய போட்டியில் எந்த மாற்றமுமின்றி, கடந்த போட்டியில் விளையாடியவர்களே, இந்தப் போட்டியிலும் விளையாட உள்ளனர்.

கடந்த போட்டியில் அதிக நோ பால் வீசிய அர்ஷ்தீப் சிங், இன்றைய போட்டியில் இடம்பெற மாட்டார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர், இன்றைய போட்டியில் விளையாடுகிறார். கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர் மீது விமர்சனம் வைத்திருந்தாலும், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர், இன்றைய போட்டியில் தவறைத் திருத்திக்கொள்வார் எனத் தெரிகிறது.

பேட்டிங்கைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் அக்‌ஷர் படேலும், சூர்யகுமார் யாதவ்வும் பட்டையைக் கிளப்பினர். அவர்கள் இருவரும் அன்று மட்டும் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் அந்தப் போட்டியில் இந்தியா வென்றிருக்கும். அதுபோல் இன்றைய போட்டியிலும் அவர்கள் மட்டுமல்லாது, மற்ற பேட்டர்களும் ஜொலிக்க வேண்டும். மேலும், ஃபீல்டிங்கிலும் இந்திய அணி சிறப்பாய்ச் செயல்பட வேண்டும். அப்படி, அனைத்து பங்களிப்பிலும் சிறப்பாய்ச் செயல்பட்டால் இந்தியா நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றும். அதேநேரத்தில், இலங்கை அணியையும் சாதாரணமாக எடை போடக்கூடாது. அந்த அணி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் நம்மைப் போன்றே சமநிலையில் உள்ளது. ஆகவே, அந்த அணியும் தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாய் களமிறங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com