நியூசி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியாவின் விக்கெட் கீப்பர் யார் ?
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் ஆக்லாந்தில் தொடங்கவுள்ளது. ஆனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட்க்கு பவுன்சர் பந்தால், தலையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அடுத்தடுத்த போட்டிகளில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். மேலும், பேட்டிங்கிலும் ராகுல் அசத்தினார், கீப்பிங் பணியையும் சிறப்பாகவே மேற்கொண்டார். இதனால் இன்றையப் போட்டியில் ரிஷப் பன்ட்டா அல்லது ராகுலா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்தாண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. ஆனால் இம்முறை இந்தியா பலமாக இருக்கிறது. நியூசிலாந்து அணியில் சில முக்கிய வீரர்கள் காயமடைந்து இருப்பதால், அது சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியிலும் ஷிகர் தவன், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
இந்தப் போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வரும் பிருத்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கெனவே நியூசிலாந்து ஏ அணியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.