“அப்போதே நான் பதவி விலகி விட்டேன்; என்னை விலக்க நீங்கள் யார்?”-PTVக்கு ஷோயப் அக்தர் கேள்வி
"அப்போதே நான் பதவி விலகி விட்டேன். என்னை விலக்க நீங்கள் யார்?” என PTV-க்கு ஷோயப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது நெறியாளர் உடன் ஏற்பட்ட முரண் காரணமாக அந்த விவாதத்திலிருந்து வெளியேறி சென்றார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 உலகக் கோப்பை வெற்றி குறித்த அந்த விவாதம், பாகிஸ்தான் நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனம் PTV-இல் ஹோஸ்ட் செய்யப்பட்டது.
விவாத நிகழ்ச்சியின்போது நெறியாளர் நௌமன் நியாஸ், அக்தரை அரங்கத்தை விட்டு வெளியேறுமாறு சொல்லி இருந்தார். அதனை அக்தர் அப்படியே செய்தார். அப்போது அந்த தொலைக்காட்சியில் விளையாட்டு வல்லுனராக கருத்துகளை சொல்லி வந்த அக்தர் தனது பதவியில் இருந்து விலகுவதாகவும் சொல்லி இருந்தார்.
இந்நிலையில் விசாரணை குழுவின் விசாரணை முடியும் வரை ஷோயப் அக்தர் மற்றும் தொகுப்பாளரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிதுள்ளது பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி நிறுவனமான PTV.
அதற்கு அக்தர் ரிப்ளை கொடுத்துள்ளார். “நாட்டு மக்களின் முன்னிலையில் நான் எனது பொறுப்பில் இருந்து விலகி இருந்தேன். என்னை விலக்கி வைக்க நீங்கள் யார்?” என PTV ட்வீட்டுக்கு பதில் ட்வீட் போட்டு கேள்வி கேட்டுள்ளார்.
நெறியாளர் மற்றும் அக்தருக்கு இடையே என்ன நடந்தது என்பதை அறிய இதை படிக்கவும் : “அரங்கத்தை விட்டு வெளியேறுங்கள்!” என சொன்ன டிவி சேனல் ஹோஸ்ட்.. வெளியேறிய ஷோயப் அக்தர்