மயாங்க் அகர்வால் எங்கே ? ஹர்பஜன் கடும் தாக்கு

மயாங்க் அகர்வால் எங்கே ? ஹர்பஜன் கடும் தாக்கு

மயாங்க் அகர்வால் எங்கே ? ஹர்பஜன் கடும் தாக்கு
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான. 16 பேரைக் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 14-வது ஆசியக் கோப்பைப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ம் தேதி தொடங்கி  28 ஆம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.

முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோதுகின்றன. செப்டம்பர் 19 ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது, பாகிஸ்தான். அதற்கு முந்தைய நாள், தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. மறுநாளே பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதுவது போல போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் அட்டவணை மாற்றப்படவில்லை.

இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான வீரர்கள் தேர்வு மும்பையில் நடைபெற்றது. தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழு, மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் கூடி வீரர்களை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மா (கேப்டன்), தவான் (து.கேப்டன்), கே.எல்.ராகுல், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர் திக் பாண்ட்யா, குல்திப் யாதவ், சேஹல், அக்‌ஷர் படேல், புவனேஷ்வர்குமார், பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது வீரர்கள் ஆசியக்கோப்பையில் பங்கேற்கின்றனர்.

ஆசியக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் "இந்திய அணியில் மயாங்க் அகர்வால் எங்கே ? கடந்த சில மாதங்களில் ஏகப்பட்ட ரன்களை குவித்தும் அவரின் பெயர் அணியில் இடம்பெறவில்லையே ? ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறையா என சந்தேகிக்கிறேன்" என தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். கோலி கேப்டனாக இருந்தால் ஒரு அணியும் ரோகித் சர்மா கேப்டனாக இருந்தால் ஒரு அணியா என்ற ரீதியில் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com