
இலங்கைக்கு எதிரான போட்டியில் சதமடித்த பிறகு விரைவாகவே சுப்மன் கில் ஆட்டமிழந்தது குறித்து, அவரது தந்தை வருத்தம் தெரிவித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் குர்கீரத் மான் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான அலாதியானது. தன்னுடைய நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வளரும் காலத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். படிக்கின்ற காலத்தை தாண்டிலும் கூட அவரது பொறுப்பான கண்டிப்பு நீண்டு கொண்டே இருக்கும். ஒரு மகனோ/மகளோ ஒரு பரீட்சையில் 80 மதிப்பெண் எடுத்திருந்தாலும் ஏன் 90 மார்க் மேல் எடுத்திருக்கலாமே என்று சொல்வார்கள். 90 மார்க் எடுத்தால் 100 எடுத்திருக்கலாமே என்று சொல்வார்கள். அதாவது பிள்ளையை மேலும் மேலும் உற்சாகப்படுத்துவார்கள்.
அப்படியான ஒரு தந்தையாக இருந்து வருகிறார் சுப்மன் கில்லின் தந்தை லக்விந்தர் பாஜி. அப்படி அவர் சுப்மன் கில்லிடம் என்ன எதிர்பார்த்தார். சுப்மன் கில் என்ன செய்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
கடந்த ஜனவரி 15ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பிறகு பெரிய அளவில் ரன் குவிக்கும் வாய்ப்பு சுப்மன் கில்லிற்கு கிடைத்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை நழுவவிட்டு 116 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர், இலங்கையில் விட்ட அந்த வாய்ப்பை தக்கவைத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து, ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்தார். 23 வயதான அவர் 149 பந்துகளை எதிர்கொண்டு, 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் விளாசி 208 ரன்களை குவித்தார். இந்திய அணியில் சதமடித்த 5ஆவது வீரராக மாறிய சுப்மன், ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த எட்டாவது வீரர் என்ற பெருமையை தக்கவைத்துகொண்டார். மேலும் இளம் வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையையும் தன்வசம் வைத்துக்கொண்டார்.
இந்நிலையில் ஹைதராபாத் போட்டிக்கு முன்னதாகவே, இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இரட்டை சதம் அடித்திருக்க வேண்டும் என்றும், அவருடைய 116 என்ற ரன்கள் சுப்மன் கில்லின் தந்தைக்கு வருத்தத்தை தான் ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார் முன்னாள் வீரர் குர்கீரத் மான். தனது சதத்தை பெரிய ஸ்கோராக மாற்றும் வாய்ப்பை சுப்மன் தவறவிட்டது, அவருடைய தந்தையை எரிச்சலடையச் செய்தது, அவர் இலங்கைக்கு எதிரான போட்டிலேயே தனது மகன் இரட்டை சதம் அடிக்காததால் மகிழ்ச்சியடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் கிரிக்கெட் வீரரான குர்கீரத் மான், ஞாயிற்று கிழமை போட்டி நடைபெறும் போது சுப்மன் கில்லின் வீட்டில் இருந்ததாகவும், அப்போது சுப்மன் கில் 116 ரன்களில் அவுட்டான போது என்ன நடந்தது என்பதையும் தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் தந்தை, "அவன் எப்படி அவுட்டாகிறான் பாருங்க, சதம் அடித்த பிறகு, இரட்டை சதமடிக்க அவனுக்கு போதுமான நேரம் இருந்தது. இந்த மாதிரி தொடக்கங்கள் எல்லாம் எப்போதுமே கிடைக்காது. அவன் அதை எப்போ தான் கத்துக்கபோறான்?" என வருத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சுப்மன் கில்லின் தந்தை லக்விந்தர் பாஜி குறித்து பேசிய அவர், “எப்பவுமே சுப்மன் மேல அவர் தந்தைக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அவருடைய திறமை எங்களுக்கு தெரியும், அவரை சின்ன வயதிலிருந்தே பார்த்துட்டு வருகிறோம். ஒருவழியாக கில் அதை செய்து காட்டிவிட்டார். இப்போது அவர் அப்பா மகிழ்ச்சி அடைந்திருப்பாருனு நம்புறன்” என்று கூறினார்.
சுப்மன் கில்லின் தந்தை ஒரு பெரிய கிரிக்கெட் ரசிகர் மற்றும் அவரது மகன் அவருடைய முழு திறமையுடன் விளையாட வேண்டும் என்று விரும்பும் ஒரு தந்தை. 2021ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கான முக்கியமான பிரிஸ்பேன் போட்டியில், கில் 91 ரன்கள் இருந்தபோது சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டபோதே அவர் மகிழ்ச்சியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.