“அடிபட்ட அம்லா நலமுடன் உள்ளார்” - டு பிளசிஸ்..!

“அடிபட்ட அம்லா நலமுடன் உள்ளார்” - டு பிளசிஸ்..!
“அடிபட்ட அம்லா நலமுடன் உள்ளார்” - டு பிளசிஸ்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் இனி வரும் போட்டிகளில் அனைத்து அணிகளை 300க்குள் சுருட்டுவோம் என்றார்.

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது என முன்பே கணிக்கப்பட்டிருந்தாலும், தென்னாப்பிரிக்கா இந்த அளவிற்கு படுதோல்வி அடையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் நேற்று அணியில் இடம்பெறவில்லை. இது அந்த அணிக்கு ஒரு இழப்பு தான். ஆனாலும் லுங்கி நிகிடி மற்றும் ரபாடா ஆகியோர் இருந்தனர். இருப்பினும் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 311 ரன்களை குவித்து விட்டனர். ஸ்டெயின் இல்லாத சமயத்தில், அனுபவ வீரரான கிரிஸ் மோரிஸை அணியில் சேர்க்காதது தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக இருந்தது.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரரான அம்லா, ஆர்ச்சர் வீசிய வேகப்பந்தில் தலையில் அடிபட்டு வெளியேறினார். இது அந்த அணியின் பேட்டிங்கில் சரிவை ஏற்படுத்தியது. ஏனென்றால் அம்லா தான் தென்னாப்பிரிக்க அணியின் தடுப்பு சுவர். அவர் சென்றது விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் ஆர்ச்சர். அவரது பந்தை எதிர்கொள்வது அனைவருக்கும் சவாலாக இருந்தது. அத்துடன் நேற்றைய போட்டியில் டேவிட் மில்லருக்கு தென்னாப்பிரிக்க அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர் இருந்திருந்தால் விக்கெட்டை இழக்காமல் ஆடியிருப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

இதற்கிடையே போட்டியின் தோல்வி குறித்து பேசிய டு பிளசிஸ், டேல் ஸ்டெயின் அணிக்கு திரும்பிய பின்னர், தங்கள் அணியில் பவுலிங்கில் மீண்டு வரும் என தெரிவித்தார். அதன்பின்னர் வரும் போட்டிகளில் எதிரணியை 300 ரன்களுக்குள் சுருட்டுவோம் எனவும் கூறினார். ஆர்ச்சரின் பந்தில் காயமடைந்த அம்லா, தற்போது நலமாக உள்ளார் என்றும், ட்ரெஸ்ஸிங் ரூமில் அம்லாவை சந்தித்தபோது அவர் நலமுடன் இருப்பதை அறிந்துகொண்டதாகவும் டு பிளசிஸ் தெரிவித்தார். இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங்க் செய்ததாக பாராட்டிய அவர், எந்த அணியும் குறிப்பிட்ட ஃபாமிற்கு வர இரண்டு போட்டிகளாவது தேவைப்படும் என கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com