தென்னாப்ரிக்கா டி20 தொடரில் தோனி பங்கேற்கிறாரா? - என்ன சொல்கிறார் கிரீம் ஸ்மித்?

தென்னாப்ரிக்கா டி20 தொடரில் தோனி பங்கேற்கிறாரா? - என்ன சொல்கிறார் கிரீம் ஸ்மித்?
தென்னாப்ரிக்கா டி20 தொடரில் தோனி பங்கேற்கிறாரா? - என்ன சொல்கிறார் கிரீம் ஸ்மித்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 என்ற டி20 தொடரில் பங்கேற்பார் எனச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

தென்னாப்பிரிக்காவில் டி20 தொடர்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப்போலவே இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளிலும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவிலும் இதுபோன்று தொடர் புதிதாக தொடங்கியுள்ளது. அந்நாட்டு, கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த ஆறு அணிகளையும் இந்திய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே வாங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகில் மற்ற நாடுகளைச் சார்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். ஜனவரி 10ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது. இந்தப் போட்டி தொடருக்கு தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தோனிக்கு திறந்திருக்கும் கதவு!

அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, எஸ்ஏ20 தொடரிலும் பங்கேற்க வாய்ப்புள்ளது. அவருக்காக எஸ்ஏ20 திறந்தே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், “பிசிசிஐயுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம். அவர்கள் நடத்தும் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய போட்டிகளின் அனுபவத்திலிருந்து நாங்களும் கற்றுக் கொள்கிறோம். பிசிசிஐயின் விதிமுறைகள் குறித்து எங்களுக்கும் நன்றாக தெரியும்.

எங்களுடைய கிரிக்கெட் லீக்கில் தோனி போன்ற தலைமைப் பண்பை கொண்ட வீரரின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர் நீண்டகாலமாக கிரிக்கெட் ஆடி வருகிறார். அவருடைய கிரிக்கெட் அனுபவம் எங்களுக்கு புதிய வடிவத்தைத் தரும். எனக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அவரை, இந்த டி20க்கு நிச்சயம் அழைத்து வருவேன். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு வீரர், உலகின் மற்ற கிரிக்கெட் நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாது. தற்போது தோனி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராகி வருகிறார். இந்த ஐபிஎல்தான் அவருக்குக் கடைசியா என்று எனக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தோனி பதிலளிக்கவில்லை

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் வாங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் தோனி ஓய்வுபெற்றால், ஒருவேளை தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெறும் டி20யில் பங்கேற்பார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்து தோனி எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வீரர் பங்கேற்பு

இந்தியாவில் ஓய்வுபெற்ற வீரர்கள் இதுபோன்று அந்நிய மண்ணில் நடைபெறும் டி20 போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் 6 அணிகளில் துபாய் ஒன்றான கேப்பிடல்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான ராபின் உத்தப்பா பங்கேற்று கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய அணிக்கு தலைமை தாங்கிய பிறகு ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்று தந்தார். அது, மட்டுமின்றி கிரிக்கெட்டிலும் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டும் பங்கேற்று விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, அந்த அணிக்காக இதுவரை 4 முறை கோப்பைகளை வென்று தந்துள்ளார்.

தோனியின் லேட்டஸ்ட் போட்டோ

இந்த ஆண்டு 5வது முறையாகக் கோப்பையை வென்றுதரும் முயற்சியில் களமிறங்கி, அதற்கான பயிற்சியில் தீவிரமாய்ச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஜார்க்கண்ட் மைதானத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட அவருடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அத்துடன் அவர் பயிற்சிக்குச் செல்லும் லேட்டஸ்ட் போட்டோக்களும் வைரலாகி வருகின்றன. இந்த ஐபிஎல்லுடன் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்ற செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com