சிட்னி டெஸ்ட் போட்டி முடிந்த பின்பு விஹாரிக்கு மெசேஜ் அனுப்பிய டிராவிட்!

சிட்னி டெஸ்ட் போட்டி முடிந்த பின்பு விஹாரிக்கு மெசேஜ் அனுப்பிய டிராவிட்!
சிட்னி டெஸ்ட் போட்டி முடிந்த பின்பு விஹாரிக்கு மெசேஜ் அனுப்பிய டிராவிட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டி முடிந்த பின்பு தனக்கு ராகுல் டிராவிட் மெசேஜ் அனுப்பியதாக இந்திய பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று வரலாற்று வாகைசூடியது இந்திய கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது இந்திய அணி. அப்போது பலரும் இந்தியா 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழக்கும் என கருதினர். ஆனால் அந்தக் கருத்துகளை எல்லாம் தவிடுபொடியாக்கியது இந்திய இளம் படை.

அதிலும் சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயத்துடன் விளையாடிய ஹனுமா விஹாரி, அஸ்வினுடன் இணைந்து திறமையாக விளையாடி அப்போட்டியை டிரா செய்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்தத் டெஸ்ட் தொடர் குறித்து 'இந்தியா டுடே' ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார் ஹனுமா விஹாரி. அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் சிட்னி டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவருமான ராகுல் டிராவிட் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் "சிட்னி டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார் அதில் 'மிகவும் சிறப்பாக விளையாடினாய், நல்லதொரு ஆட்டத்தை ஆடினாய்' என தெரிவித்திருந்தார். அதுதான் அவரின் சிறப்பு அவர் எப்போதும் என் மதிப்புக்குரியவர்" என்றார் விஹாரி.

மேலும் பேசிய விஹாரி "நான் இந்திய ஏ அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும். அப்போது சிராஜ்.சைனி, சுப்மன், மயாங்க் ஆகியோர் அணியில் இருந்தனர். ராகுல் டிராவிட் பயிற்சியாளரானதும் இந்திய ஏ அணி அதிகமான சுற்றுப் பயணங்களுக்கு சென்று விளையாடியது. இவையெல்லாம் இந்திய ஏ அணிக்காக விளையாடிய கடைசி 3 ஆண்டுகளில் நடந்தது. ராகுல் டிராவிட் வந்த பின்புதான் ரஞ்சி கோப்பையில் இருந்து இந்திய அணிக்கு தேர்வாகும் இடைவெளியை இந்திய ஏ அணி மூலம் குறைத்தார்" என்றார்.

தொடர்ந்து பேசிய விஹாரி "இளைஞர்களை வழிநடத்துவதில் ராகுல் டிராவிட் மிகச்சிறந்தவர். எங்களுக்கு எப்போதெல்லாம் வழிக்காட்டுதல் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் ராகுல் டிராவிட் எங்களுடன் இருப்பார். கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு நான் தேர்வானபோது அவரிடம் "சார் நான் இந்திய அணிக்காக முதல் போட்டியை விளையாடப் போகிறேன்" என்றேன். அதற்கு அவர் "நீ ரஞ்சி கோப்பையிலும், இந்திய ஏ அணிக்காகவும் சிறப்பாக விளையாடினாய், நீ நாட்டுக்காக விளையாட தயாராகிவிட்டாய்" என்றார். அந்த வார்த்தைகள்தான் என்னுடைய நம்பிக்கை" என்றார் ஹனுமா விஹாரி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com