7 out of 7 - மும்பையின் தோல்வி மும்பையில் அல்ல; பெங்களூருவிலேயே தீர்மானிக்கப்பட்டது!
15 வருட ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோற்றிருக்கிறது. அந்த அணி மும்பை இந்தியன்ஸ் என்பது கூடுதல் அதிர்ச்சி கொடுக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக முறை சாம்பியனான ஒரு அணி இத்தனை மோசமாக ஆடி வீழ்வது கொடுமையிலும் கொடுமைதான். மும்பை வீழ்ந்ததற்கான காரணம் என்ன?
இந்த சீசன் முழுவதுமாக மும்பையிலும் மும்பையை சுற்றிலும்தான் நடைபெறப்போகிறது என பிசிசிஐ அறிவித்த சமயத்தில் மும்பையை தவிர மற்ற அணிகளின் ரசிகர்கள் எல்லாம் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். இந்த முடிவு மும்பை அணிக்கே சாதகமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். ஆனால், ரசிகர்களின் கணிப்பு முற்றிலும் பொய்யாகி போயிருக்கிறது. இதுவரையில் இல்லாத வகையில் ஆடிய அத்தனை போட்டிகளிலும் தோற்று நிற்கிறது.
தொடக்கத்திலிருந்தே மும்பை அணி ஒரு செட்டில் ஆகாத அணியாகவே தெரிந்தது. சூரியகுமாரின் காயத்திற்காக மிடில் ஆர்டரில் இளம் வீரர்களை இறக்கியதிலிருந்து அணியில் எக்கச்சக்க மாற்றங்கள் இருந்தது. முதல் 2 போட்டிகளை தவிர, அடுத்ததாக மும்பை ஆடிய அத்தனை போட்டியிலுமே ப்ளேயிங் லெவன் மாறிக்கொண்டே இருந்தது. ஒரு நிலையான அணியை கண்டடைவதிலேயே மும்பைக்கு பிரச்சனைகள் இருந்தது.
சொல்லப்போனால், மெகா ஏலத்திற்கு பிறகு நடைபெறும் போட்டி என்பதால் எல்லா அணிகளுக்குமே ஒரு நிலையான ப்ளேயிங் லெவனை கண்டடைவதில் பிரச்சனை இருக்கத்தான் செய்தது. ஆனால், மும்பை அளவுக்கு மற்ற அணிகளின் தேடுதல் நீளவில்லை. இரண்டு மூன்று போட்டிகளிலேயே செட்டில் ஆக தொடங்கினார்கள். ஆனால், மும்பை அடுத்து ஆடப்போகும் எட்டாவது போட்டியிலும் ப்ளேயிங் லெவனை மாற்றத்தான் போகிறது.
மும்பை அணி கடைசியாக 2020 சீசனில் சாம்பியனாகியிருந்தது. அந்த சீசனில் ஒட்டுமொத்தமாகவே 16 வீரர்களைத்தான் மும்பை பயன்படுத்தியிருந்தது. குறைவான வீரர்களை பயன்படுத்தி நிறைவான ரிசல்ட்டை பெற்றிருந்தது. அதேநேரத்தில், ப்ளே ஆஃப்ஸ் கூட செல்லாமல் வெளியேறிய கடந்த சீசனில் மொத்தம் 20 வீரர்களை மும்பை பயன்படுத்தியிருந்தது. அந்த சீசனில் எல்லா அணிகளை விடவும் மிகக்குறைவாக 16 வீரர்களை மட்டுமே பயன்படுத்தியிருந்த சென்னை சாம்பியன் ஆகியிருந்தது. ஒரு நிலையான ப்ளேயிங் லெவன் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இதன் மூலம் புரிந்துக்கொள்ளலாம்.
இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் 17 வீரர்களை பயன்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் இந்த எண்ணிக்கை கூடவே போகிறது. சரி, அப்படியெனில் ஒரு நிலையான ப்ளேயிங் லெவனை கண்டடையாமல் சகட்டுமேனிக்கு பென்ச்சில் இருக்கும் வீரர்களை இறக்கிக் கொண்டிருப்பதுதான் பிரச்சனையா? அதுவும் ஒரு பிரச்சனைதானே ஒழிய அதுமட்டுமே பிரச்சனை இல்லை. ஏனெனில் 2019 சீசனில் மும்பை சாம்பியன் ஆகியிருந்தது. அந்த சீசனில் மும்பை பயன்படுத்திய வீரர்களின் 21. அங்கேயும் நிறைய வீரர்களை மாற்றி மாற்றி ப்ளேயிங் லெவனையும் மாற்றிக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் வென்றார்கள். பிறகு, இந்த சீசனில் என்னதான் பிரச்சனை? வீரர்கள் பெர்ஃபார்ம் செய்வதே இல்லை அதுதான் பிரச்சனை.
ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் என நான்கு வீரர்களை மும்பை ஏலத்திற்கு முன்பாக ரீட்டெய்ன் செய்திருந்தது. இதில், ரோஹித் சர்மா இந்த சீசனில் 7 போட்டிகளில் 114 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 126 மட்டுமே. டெல்லிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்தார். அதை தவிர மற்ற போட்டிகளில் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. 7 போட்டிகளிலுமே முதல் விக்கெட்டாக வீழ்ந்தது ரோஹித்தான். மேலும், 7 போட்டிகளில் ஐந்தில் பவர்ப்ளேக்குள்ளாகவே வீழ்ந்திருக்கிறார். ரோஹித்திற்கு அடுத்ததாக பும்ரா, அவர் 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்.
இந்த 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகள் ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் கிடைத்திருந்தது. ஆக, மீதமிருக்கும் 6 போட்டிகளில் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்திருக்கிறார். பொல்லார்ட், 7 போட்டிகளில் ஆடி 96 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ரீட்டெய்ன் செய்யப்பட்டவர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே ஓரளவுக்கு நன்றாக ஆடி வருகிறார். 5 போட்டிகளில் ஆடி 232 ரன்களை 153 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். சூர்யகுமாரை தவிர மற்ற மூவருமே சுமாராக கூட ஆடியிருக்கவில்லை.
ஏலத்தில் மிக அதிகமாக இஷன் கிஷனை 15.25 கோடி கொடுத்து மும்பை வாங்கியிருந்தது. 15 கோடி என்பது வெளி வட்டாரத்தினருக்கு ஒரு மாபெரும் தொகையாக மட்டுமே தோன்றும். ஆனால், மும்பையை பொறுத்தவரை அது இஷன் கிஷனின் மீது வைத்திருக்கும் மாபெரும் நம்பிக்கையின் வெளிப்பாடு. ஆனால், அந்த நம்பிக்கைக்கு உகந்த வகையிலான பெர்ஃபார்மென்ஸை இஷன் கிஷனால் கொடுக்க முடியவில்லை. 7 போட்டிகளில் 191 ரன்களை எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 116 மட்டுமே. இந்த 191 ரன்களில் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே 135 ரன்களை எடுத்திருந்தார். அடுத்த 5 போட்டிகளில் வெறும் 56 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்.
பேட்டிங்கில் முக்கியமான தலைகள் எல்லாம் சொதப்ப, திலக் வர்மா மற்றும் ப்ரெவீஸ் போன்ற இளம் வீரர்களை அந்த அணி அதிகமாக நம்பியிருக்கிறது. திலக் வர்மாதான் இந்த சீசனில் மும்பை அணிக்கு அதிக ரன்களை அடித்த வீரராக இருக்கிறார். பேபி ஏபிடி எதிர்பார்த்ததை விட நன்றாகவே ஆடியிருக்கிறார். ஆனால், இவர்களால் மட்டுமே போட்டியை வெல்ல முடியவில்லை. குறைந்தபட்சமாக இவர்களுக்கு கொஞ்சமேனும் ஒத்துழைக்கவாது வேண்டிய சீனியர்களால் அதை கூட செய்ய முடியவில்லை.
பௌலிங்கை பற்றி பேசினால் இரத்தக்கண்ணீரே வந்துவிடும். பும்ராவாலயே விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. ஒத்துழைப்பு இல்லை என குற்றம்சாட்டும் அளவுக்கு அசாதாரண ஸ்பெல்கள் எதையும் பும்ரா வீசியிருக்கவில்லை. வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களான மில்ஸ் மற்றும் டேனியல் சாம்ஸின் சோகக் கதைகளை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பேட் கம்மின்ஸ் அடித்த இன்னும் யாருக்கும் மறந்திருக்காது என நினைக்கிறேன். இந்த இருவரின் எக்கானமி ரேட்டுமே 11 க்கு மேல் இருக்கிறது. இதனால் மும்பை அணியின் டெத் ஓவர் பௌலிங்கும் மோசத்திலும் மோசமாக இருக்கிறது. கடைசிக்கட்ட ஓவர்களில் ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கின்றனர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான உனத்கட், பாசில் தம்பி ஆகியோராலும் பெரிதாக ஒன்றும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஸ்பின்னரான முருகன் அஷ்வின் எதோ கொஞ்சம் டீசண்ட்டாக வீசிகொண்டிருந்தார். அவரையும் கடைசி போட்டியில் பென்ச்சில் வைத்துவிட்டார்கள். 8.25 கோடிக்கு வாங்கப்பட்ட டிம் டேவிட்டையும் ஒன்றிரண்டு போட்டியுடனே பென்ச்சுக்கு அனுப்பிவிட்டார்கள்.
இப்படி ஒட்டுமொத்த அணியுமே மொத்தமாக சேர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கிறது. எனில், பிரச்சனை இந்த அணியிடமும் இந்த வீரர்களிடமும் மட்டும்தானா? நிச்சயமாக இல்லை. பிரச்சனை மும்பையிலிருந்து அல்ல. பெங்களூருவிலிருந்து தொடங்கியது. பிப்ரவரி மாதம் நடந்த அந்த மெகா ஏலத்தில் மும்பை தங்களுக்கான வீரர்களை தெரிவு செய்த அந்த தருணத்திலிருந்தே தொடங்கியது.
ஐ.பி.எல் ஐ பொறுத்தவரைக்கும் ஒரு அணி அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை ப்ளேயிங் லெவனில் வைத்துக்கொள்ளலாம். எல்லா அணிகளும் பெரும்பாலான சமயங்களில் 4 வீரர்களையும் ப்ளேயிங் லெவனில் எடுப்பார்கள். குறைந்தபட்சமாக 3 வெளிநாட்டு வீரர்களையாவது ப்ளேயிங் லெவனில் வைத்திருப்பார்கள். ஆனால், மும்பை இந்த சீசனில் ஒரு போட்டியில் வெறும் இரண்டே இரண்டு வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியது. அதில் ஒருவர் பொல்லார்ட். இன்னொருவர் இந்த சீசனில்தான் அறிமுகமாகியிருக்கும் ப்ரெவீஸ். ஆக, ப்ளேயிங் லெவனுக்கு தகுதியான ஒரு 4 வெளிநாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு கூட மும்பை ஏலத்தில் நன்றாக செயல்படவில்லை.
நவீன டி20 ட்ரெண்ட்படி ஒரு அணியில் ஒன்றுக்கும் அதிகமான ரோல்களை செய்யக்கூடிய வீரர்கள் அதிகம் இருப்பதையே அணிகள் விரும்பும். அதாவது, ஒரு 7-8 வீரர்களாவது பௌலிங் செய்ய வேண்டும். 7-8 வீரர்கள் நன்றாக பேட்டிங்கும் ஆட வேண்டும். இதுதான் இப்போதைய ட்ரெண்ட். ஆனால், இந்த சீசனில் ஒரு போட்டியில் மும்பை அணி சரியாக 6 பேட்ஸ்மேன்களையும் 5 பௌலர்களையும் உள்ளடக்கிய ஒரு பழங்கால அணியை கொண்டு ஆடியிருந்தது. ஆக, நவீன ட்ரெண்டுக்கான ஒரு ப்ளேயிங் லெவனை கூட உருவாக்க முடியாத ஒரு அணியைத்தான் மும்பை ஏலத்தில் தெரிவு செய்து வைத்திருக்கிறது.
சாக்கு போக்குகளை சொல்லி ஆடாமல் இருக்கும் ஆர்ச்சருக்கு ஆசைப்பட்டு கையிலிருந்த ட்ரெண்ட் போல்டை கோட்டைவிட்டார்கள். சீராக ஆடும் டீகாக்கிற்கு பதிலாக கடந்த சீசனில் தட்டுத்தடுமாறிய இஷன் கிஷனுக்கு 15 கோடியை கொட்டி கொடுத்திருந்தார்கள். எக்கானமிக்கலாக வீசும் ராகுல் சஹாரை
தாரை வார்த்தார்கள். இப்படி அந்த மெகா ஏலத்திலேயே மும்பை எக்கச்சக்கமாக தோல்விகளை சந்தித்துவிட்டது. இப்போது அடையும் தோல்விகளெல்லாம் பெங்களூருவிலேயே தீர்மானிக்கப்பட்டதுதான்.
இன்னும் 7 போட்டிகள்தான் இருக்கிறது. அணியை மாற்றிக்கொண்டே இருக்காமல், நம்பிக்கையுள்ள வீரர்களுக்கு நிலையான வாய்ப்புகளை கொடுத்து ஒரு சரியான அணியை முதலில் கட்டமைக்க வேண்டும். மற்றவற்றை மினி ஏலங்களில் பார்த்துக்கொள்ளலாம். சீசனை இழந்தாயிற்று, இனியாவது எந்த அழுத்தமும் இல்லாமல் ஆடி ஃபார்ம் அவுட் ஆகியிருக்கும் ஆட்களெல்லாம் ஃபார்முக்கு வரும் வேலையை பாருங்க பல்தான்ஸ்!
- உ.ஸ்ரீராம்

