விக்கெட் கீப்பர் to கூல் கேப்டன்...தோனியை எல்லோருக்கும் பிடித்துப் போக காரணம் என்ன?

விக்கெட் கீப்பர் to கூல் கேப்டன்...தோனியை எல்லோருக்கும் பிடித்துப் போக காரணம் என்ன?
விக்கெட் கீப்பர் to கூல் கேப்டன்...தோனியை எல்லோருக்கும் பிடித்துப் போக காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வரும் 7ஆம் தேதி அன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவரை பெருவாரியான மக்கள் எல்லோருக்கும் பிடித்துப் போக காரணம் என்ன? என்பதை குறித்து பார்ப்போம். 

ஒரே ஆண்டில் ஹீரோவான தோனி!

23 டிசம்பர் 2004, தோனி சர்வதேச கிரிக்கெட்டில் என்ட்ரியான நாள். முதல் போட்டியில் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி நடையை கட்டினார். தொடர்ந்து அதற்கடுத்த மூன்று போட்டிகளில் சொதப்பி இருந்தாலும் 2005இல் தோனியின் ஆட்டம் வேற லெவல். அந்த ஆண்டில் 24 இன்னிங்ஸ் விளையாடிய தோனி 895 ரன்களை குவித்தார். அதில் இரண்டு சதங்களும் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிராக 148 மற்றும் இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்களை விளாசி இருந்தார். அதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவானார். பள்ளி பருவத்திலிருந்து தோனி கொண்டிருந்த தவத்தின் பலன் அது. 

யூகிக்க முடியாத மாற்றங்களின் மூலம் வெற்றி பெறுபவர்!

தோனி 2007இல் டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு, முதலாவது டி20 உலக கோப்பையில் அணியை வழிநடத்தினார். அணியை இறுதி வரை கொண்டு சென்ற அவர் கோப்பையை வென்று அசத்தினார். அந்த இறுதிப் போட்டியின் இறுதி ஓவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் விளையாடிய அனுபவம் இல்லாத ஜோகிந்தர் ஷர்மாவை பந்துவீச அழைத்தார் தோனி. ஹர்பஜனுக்கு அந்த போட்டியில் ஒரு ஓவர் எஞ்சி இருந்தது. ஆனாலும் கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்டது. பாகிஸ்தானின் வெற்றிக்கு 13 ரன்கள். ஆனால் தோனியின் நம்பிக்கையை வீண் போக செய்யாத வகையில் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தினார் ஜோகிந்தர். அதன் பிறகு தோனியின் தில்லான முடிவை பலரும் பாராட்டி இருந்தனர். 

ரோகித் ஷர்மாவை தொடக்க வீரராக களம் இறக்கியது, அனுபவ வீரர்களுக்கு மாற்றாக இளம் வீரர்களை அணியில் சேர்த்து வலுவான இந்திய அணியை கட்டமைத்தது என மாற்றங்களை தோனி இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார். 

தன்னடக்கம் மிக்க தலைவன்!

எதிரணி பேட் செய்யும் போது பாட்ஷா படத்தில் வரும் மாணிக்கம் போலவும். அதுவே இந்திய அணி பேட் செய்யும் போது பாட்ஷாவாக மாறி எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்வதிலும் தோனி வல்லவர். களத்தில் வெற்றி பெற்றாலும் பெரிதும் கொண்டாடமல் ‘இதுவும் கடந்து போகும்’ என்பது போல தன்னடத்துடன் கேப்டன் தோனி நடந்து கொள்வது பாக்குவத்தன்மையின் உச்சம். கோப்பையை வென்றாலும் அதை தன் அணி வீரர்களிடம் ஒப்படைக்கும் தலைவன். 

ஆஸ்திரேலிய மண்ணில் 2008இல் இந்திய அணி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் வென்ற போது கூட தன் அணி வீரர்களிடம் கொண்டாட்டம் எதுவும் வேண்டாம் என சொல்லி உள்ளார் தோனி. எதிணிக்கு இந்த வெற்றி திறமையினால் கிடைத்தது என்பதை சொல்லவே தோனி இந்த ஏற்பாட்டை செய்தாராம். 

உலக கோப்பையை வென்ற கேப்டன்!

2011 உலக கோப்பை இறுதி போட்டியில் தோனி அடித்த அந்த சிக்ஸர் அவரை பரவலாக கிரிக்கெட் குறித்து தெரியாதவர்களுக்கு கூட பிடித்துப் போக செய்தது. அதற்கு காரணம் அந்த சிக்ஸர் மூலம் தோனி இந்திய அணிக்கு 50 ஓவர் உலக கோப்பையை வென்று கொடுத்தார். அதே போல 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியும் இதற்கு மற்றொரு காரணமாக சொல்லலாம். 

ஜூனியர்களுக்கு டஃப் கொடுக்கும் சீனியர்!

கேப்டன் பொறுப்பை கோலியிடம் கொடுத்த பிறகும் தோனி இந்திய அணியில் ஆக்டிவாக விளையாடினார். அதற்கு காரணம் அவரது ஃபிட்னஸ் லெவல். வேகமாக ஓடுவது, யோ - யோ டெஸ்டில் தேர்ச்சி பெறுவது, மின்னல் வேக ஸ்டம்பிங் என இளம் வீரர்களுக்கு டஃப் கொடுத்தார் தோனி.

இது தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமகனாக தோனி இருப்பதும் தமிழ்நாட்டு மக்களுக்கு அவரை இன்னும் கூடுதலாக பிடித்து போக மற்றொரு காரணமாக இருக்காலம். ஒரு விளையாட்டு வீரன் தனது ஆட்டத்தின் மூலம் பார்வையாளர்களையும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்படுவது வழக்கம். தோனி அப்படி பலமுறை பார்வையாளர்களுடன் எமொஷனலாக தன்னை கனெக்ட் செய்து கொண்டுள்ளார். அதுவே அவரை எல்லோருக்கும் பிடித்து போவதற்கான பிரதான காரணமாக சொல்லலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com