சிஎஸ்கேவின் திட்டம்தான் என்ன? தோனியை தாண்டி எப்போது யோசிக்கப்போகிறீர்கள்?

சிஎஸ்கேவின் திட்டம்தான் என்ன? தோனியை தாண்டி எப்போது யோசிக்கப்போகிறீர்கள்?
சிஎஸ்கேவின் திட்டம்தான் என்ன? தோனியை தாண்டி எப்போது யோசிக்கப்போகிறீர்கள்?

ஏதோ ஒரு சமயத்தில் சென்னை அணி தோனியை தாண்டி யோசித்துதானே ஆக வேண்டும்? புதிதாக வருபவர் வந்த வேகத்தில் அப்படியே தோனியின் இடத்தை நிரப்பிவிட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? 

நடப்பு ஐ.பி.எல் சீசன் தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னை அணியிடமிருந்து ஒரு பரபரப்பான அறிக்கை வெளியாகியிருந்தது. இத்தனை சீசன்களாக அந்த அணிக்கு கேப்டனாக இருந்த தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியான முடிவாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அதே ரசிகர்கள் தோனி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறார் என வழக்கம்போல தோனியை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சீசன் தொடங்குகிறது. புதிய கேப்டனான ஜடேஜா தலைமையில் சென்னை மரண அடி வாங்குகிறது. 8 போட்டிகளில் 6 தோல்விகள். நாளை சன்ரைசர்ஸுக்கு எதிராக சென்னை அணி மோதவிருக்கும் நிலையில், இன்று மாலை சிஎஸ்கேவிடமிருந்து மீண்டும் ஒரு பரபரப்பான அறிக்கை வெளியாகிறது. 'ஜடேஜா தனது சொந்த ஆட்டத்தில் கவனம் செலுத்த இருப்பதால், மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடமே கொடுக்க இருக்கிறார்' என அதில் கூறப்பட்டிருக்கிறது. ஆக, சன்ரைசர்ஸுக்கு எதிரான நாளைய போட்டியில் டாஸ் போடுவதற்கு வில்லியம்சனுடன் ஜடேஜா வரப்போவதில்லை. தோனிதான் வரப்போகிறார். சென்னை அணியின் திட்டம்தான் என்ன? எதற்கு இத்தனை குழப்பங்கள்?

முதலில் சென்னை அணியின் கலாச்சாரத்தில் ஒரு வீரரை சென்னை அணி இப்படி ட்ரீட் செய்ததே கிடையாது. அதாவது, ஒரு சாக்லெட்டை கொடுப்பதுபோல் ஆசைக்காட்டி பறித்துக் கொள்ளும் வேலையை சென்னை அணி செய்ததே இல்லை. அதுதான் சென்னை அணியின் சக்சஸ் சீக்ரெட்டுமே கூட. போட்டியிலேயே ஆடாமல் பென்ச்சிலேயே உட்காந்திருக்கும் வீரர்கள் கூட இந்த அணியில் ரொம்ப சௌகரியத்தோடும் கௌரவத்தோடும் இருப்பார்கள். சென்னை அணிக்காக ஆடிய பல முன்னாள் வீரர்களும் சென்னை அணியின் தனித்தன்மையாக இதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லையென்றவுடன் தினேஷ் கார்த்திக்கை அவராகவே கேப்டன் பதவியிலிருந்து விலகும்படி செய்தது கொல்கத்தா. தொடர் தோல்விகளால் விரக்தியடைந்த சன்ரைசர்ஸ் நிர்வாகம் வார்னரிடமிருந்து கேப்டன் பதவியை பிடுங்கியதோடு அணியிலிருந்தே ஓரங்கட்டி கொடியாட்ட வைத்தது. சென்னை அணியின் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத அணுகுமுறை இது. எந்த ஒரு வீரரையும் சென்னை இவ்வளவு அசௌகரியமாக உணர வைக்காது. ஆனால், இதெல்லாம் இன்று மாலை வரைதான்.

மாலை வெளியான கேப்டன்சி மாற்ற அறிக்கை சென்னை அணியின் கலாச்சாரத்திலும் குணாதிசயத்திலுமே ஒரு மாற்றம் உண்டாகியிருக்கிறதோ என தோன்றுகிறது. ஜடேஜாவாக முன் வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகியிருப்பதாகத்தான் அறிக்கை சுட்டுகிறது. தினேஷ் கார்த்திக் குறித்து கொல்கத்தாவும் இதே போன்ற அறிக்கையைத்தான் வெளியிட்டது. தினேஷ் கார்த்திக் அவராகவே கேப்டன்சியை விட்டு விலகினார் என்பார் என்பதை எப்படி நம்பினோமோ அப்படித்தான் ஜடேஜாவின் விலகலையும் நம்ப வேண்டியிருக்கிறது.

ஜடேஜா தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தப்போகிறார் என ஒரு சரியான காரணத்தை குறிப்பிட்ட வகையில் இந்த அறிக்கையை வரவேற்கலாம். ஏனெனில், ஜடேஜாவின் ஆட்டம் இந்த சீசனில் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது. 8 போட்டிகளில் 112 ரன்களை மட்டுமேத்தான் அடித்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 121 மட்டும்தான். எதிர்பார்த்த அதிரடியான ஃபினிஷிங் அவரிடமிருந்து வரவே இல்லை. பந்துவீச்சிலும் 8 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 8.5 க்கு நெருக்கமாக இருக்கிறது. பெரிதாக விசேஷம் இல்லை.

கேப்டன்சி என்ற வகையில் பார்த்தால் கூட டாஸ் மற்றும் போட்டிக்கு பிறகான பேட்டிக்கு மட்டுமே ஜடேஜா பயன்பட்டார். களத்தில் தோனிதான் அத்தனை முக்கியமான முடிவுகளையும் எடுக்கிறார் எனும் விமர்சனமும் சிஎஸ்கே மீது இருந்தது. ஒரு கேப்டனாகவும் சரி ஆல்ரவுண்டராகவும் சரி, ஜடேஜா எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதனால்தான் இந்த கேப்டன்சி மாற்றம் என புரிந்துக்கொண்டாலும் எங்கிருந்து பெறப்பட்டதோ அங்கேயே ஏன் கொடுக்கப்பட்டது? தோனியை தவிர அணியில் வேறு சாய்ஸே இல்லையா?

தோனி ஏற்கனவே சிஎஸ்கே அணியிலிருந்து தன்னுடைய முக்கியத்துவத்தை குறைக்க ஆரம்பித்துக் கொண்டுவிட்டார். 2021 சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற சமயத்திலேயே ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துவிட்டார். சென்னை சேப்பாக்கத்தில் வைத்து தனது கடைசி போட்டியை ஆட வேண்டும் என்பது மட்டுமே தோனியின் விருப்பம். இதனாலயே இந்த சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக வீரர்கள் ரீட்டெய்ன் செய்யப்பட்ட போது தன்னை விட ஜடேஜாவுக்கு அதிக தொகையை கொடுக்க தோனியே தானாக முன்வந்து ஒப்புக்கொண்டார். இதன் நீட்சியாகத்தான் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார். இந்த சீசனின் லீக் போட்டிகள் மும்பையிலும் மும்பையை சுற்றிலும் மட்டுமே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ப்ளே ஆஃப்ஸ் எங்கே வைத்து நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை. சென்னை ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெறும் சூழல் இருக்கும்பட்சத்தில் ப்ளே ஆஃப்ஸ் சென்னை சேப்பாக்கத்தில் நிகழ்வதற்கான ஒரு வாய்ப்பும் இருந்தது. ஆனால், சென்னை இந்த சீசனில் ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற வாய்ப்பே இல்லாத சூழலில் சமீபத்தில் ப்ளே ஆஃப்ஸ் நடைபெறும் மைதானங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் சேப்பாக்கம் இல்லை. ஆக, தோனி தனது விருப்பப்படி சேப்பாக்கத்தில் கடைசி போட்டியை ஆடிவிட்டு ஓய்வு பெறும் வாய்ப்பே இல்லை. சேப்பாக்கத்தில் தோனி ஆட வேண்டுமெனில், அடுத்த சீசனிலும் அவர் ஆடியாக வேண்டும்.

இப்படியான சூழலில் ஜடேஜாவை அதிகாரப்பூர்வ கேப்டனாக வைத்துக் கொண்டு தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருப்பது சிஎஸ்கேவின் ப்ராண்ட் வேல்யூவையே குறைப்பதாக இருந்தது. 2020 சீசனிலும் இப்படித்தான் மோசமாக தோற்றார்கள். அந்த சீசனிலும் கேப்டனாக இருந்த தோனி பெரிதாக சோபிக்கவே இல்லை. ஆனாலும் சென்னை தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது போன்ற எந்த அதிரடி முடிவுகளையும் எடுக்கவில்லை. ஏனெனில், அணியின் ரிசல்ட் தனிப்பட்ட ஃபார்ம் எல்லாவற்றையும் தாண்டி தோனியே ஒரு மிகப்பெரிய ப்ராண்டாக இருந்தார். எந்த சரிவாலும் அவரின் மதிப்பை குறைக்க முடியவில்லை. அது சென்னை அணிக்கு பெரிய பலமாக இருந்தது. தோற்ற போதும் எல்லாவிதத்திலும் சென்னை அதே கம்பீரத்தோடு இருந்தது. ஆனால், தோனிக்கு இருந்த அந்த உச்சபட்ச நட்சத்திர மதிப்பு ஜடேஜாவுக்கு கிடையாது. தோற்றாலும் தோனியை வைத்துக் கொண்டே அடுத்த சீசனில் ஆடியதை போல ஜடேஜாவை வைத்து ஆட முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. தனிப்பட்ட முறையில் அவரும் ஒரு பெரும் முனைப்போடு துடிப்பாக பெர்ஃபார்ம் செய்யாமல் போனதும் ஜடேஜாவுக்கான பின்னடைவாக அமைந்தது.

தோனி எப்படியும் அடுத்த சீசனில் ஆடப்போகிறார். அவரை ஏன் சாதாரண வீரராக மட்டுமே வைத்துக் கொண்டு நம்முடைய மதிப்பை நாமே குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த திடீர் பரபரப்பு அறிக்கை. அணியின் நிலையை எடுத்துக் கூறி அடுத்த சீசன் முழுவதுமாக தோனி ஆடுவார் என்கிற உத்தரவாதத்தை வாங்கிய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கக்கூடும். 2020 சீசனின் சரிவிலிருந்து எப்படி மீண்டு வந்து 2021 சீசனில் சென்னை சாம்பியன் ஆனதோ அதேபோன்று இந்த சீசனின் சரிவிலிருந்து சென்னை அடுத்த சீசனில் மீள வேண்டும். அடுத்த சீசனை சிறப்பாக முடித்துக் கொடுத்துவிட்டு தோனி ஓய்வு பெறும் திட்டங்கள் குறித்து யோசிக்க வேண்டும். இதுவே சென்னையின் தற்போதைய திட்டமாக இருக்கக்கூடும்.

இப்போது ஏற்பட்டிருக்கும் சரிவிற்கான உடனடி தீர்வாக இது நல்ல முடிவாகவே தெரிகிறது. ஆனால் நீண்டகால அடிப்படையில் இந்த முடிவு எப்படி கைக்கொடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு சமயத்தில் சென்னை அணி தோனியை தாண்டி யோசித்துதானே ஆக வேண்டும்? புதிதாக வருபவர் வந்த வேகத்தில் அப்படியே தோனியின் இடத்தை நிரப்பிவிட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? இந்த கேள்விக்கான பதிலை சிஎஸ்கேவும் காலமும்தான் சொல்ல வேண்டும்.

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com