இந்தியா-ஜிம்பாப்வே போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும்? காத்திருக்கும் 'ட்விஸ்ட்'

இந்தியா-ஜிம்பாப்வே போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும்? காத்திருக்கும் 'ட்விஸ்ட்'
இந்தியா-ஜிம்பாப்வே போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும்? காத்திருக்கும் 'ட்விஸ்ட்'

இந்தியா-ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டிகளில் இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் தோல்வியை சந்தித்தாலோ அல்லது போட்டிகள் மழையால் கைவிடப்பட்டாலோ பாய்ண்ட்ஸ் பட்டியலே தலைகீழாக திரும்பும் வாய்ப்புகள் இருக்கின்றது.

ஒரு வேளை தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பும், தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்று இந்திய அணி தோல்வியை சந்தித்தால், இந்திய அணி வெளியேறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. பாகிஸ்தான் அணி, இந்திய அணியுடன் தோல்வியை சந்தித்தாலும் இன்னும் அழுத்தம் தரகூடிய இடத்தில் தான் நிலைத்திருக்கிறது. பல குழப்பங்களோடிருக்கும் நிலையில் தான் ஞாயிற்று கிழமையன்று குரூப் 2 பட்டியலின் 3 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

குரூப் 1 பட்டியலில் ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறி, மற்ற இரு அணிகளுக்கு இடையே மட்டும் தான் அரையிறுதிக்கான பலத்த போட்டி இருந்து வருகிறது. ஆனால் குரூப் 2 பட்டியலை பொறுத்த வரை மட்டும் தான் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய 4 அணிகளும் அரையிறுதி தகுதிக்கான போட்டியில் இன்னும் களத்தில் இருக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணி 2022 டி20 உலகக் கோப்பையின் குரூப் 2 பிரிவில் இருந்து அரையிறுதி செல்வதற்கான தகுதிப் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்ததன் மூலம் ஒரு பெரிய சிக்கலை தவிர்ந்திருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி பெற்று, அரையிறுதித் தகுதிச் சூழலை மற்ற 2 அணிகளுக்குமான கதவாக திறந்துவிட்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்னும் களத்தில் இருப்பதால், குரூப் 2 பிரிவில் நாக் அவுட்களுக்கான ஒரு இடம் கூட இன்னும் சீல் செய்யப்படவில்லை. இந்தியா தனது கடைசி சூப்பர் 12 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் ஒன்றும் இல்லை, ஆனால் போட்டியை தோற்றாலோ அல்லது போட்டி மழையால் வாஷ் அவுட் செய்யப்பட்டாலோ என்ன ஆகும்?

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் மழை மிகப் பெரிய வில்லனாக மாறி பல போட்டிகளைக் கழுவி விட்டது. ஒருவேளை மழைக்கு மட்டும் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தால் மழை தான் முதல் ஆளாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும். அந்த அளவிற்கு பல போட்டிகளை கவுத்தது மழை. குரூப் 2 பிரிவில் மழை சாபம் அவ்வளவு கொடியதாக இல்லை என்றாலும், குரூப் 1 இல் சில முக்கியமான போட்டிகள் கைவிடப்பட்டதை ஒட்டி, அரையிறுதிக்கான தகுதி புள்ளிகளில் பல குழப்பமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது.

இந்தியா தற்போது 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென்னாப்பிரிக்கா (5 புள்ளிகள்) மற்றும் பாகிஸ்தான் (4 புள்ளிகள்) முறையே 2 மற்றும் 3வது இடத்திலும் உள்ளன. ஜிம்பாப்வேக்கு எதிரான இந்தியாவின் போட்டியில் மழை இடையூறு ஏற்பட்டு 5 ஓவர் போட்டி கூட நடக்கவில்லை என்றால், இரு அணிகளும் ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும். அப்படியானால் இந்தியாவின் எண்ணிக்கை 7 ஆக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆனால் முதல் இடத்தில் நிலைத்திருப்பதற்கான வாய்ப்பை இழக்கும். நெதர்லாந்தை வீழ்த்தி, சிறந்த ரன் ரேட் எடுத்தால் தென்னாப்பிரிக்கா அணி குழுவில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெறும்.

மேலும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் தோல்வியை தழுவினால் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளில் ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். ஒரு வேளை இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் தோல்வியை சந்தித்தால் சிறப்பான ரன்ரேட்டில் இருக்கும் பாகிஸ்தான் அணி கூட முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வெற்றி பெற்றால் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் உலககோப்பையை விட்டு வெளியேறும்.

டி20 உலகக் கோப்பையில் எந்த ஒரு குரூப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டுமே மழை பெய்தால் ரிசர்வ் டே வழங்கப்படும். சண்டே எப்போதும் ஒரு அதிரடியான போட்டிகளோடு இருக்கும், ஆனால் இந்த சண்டே ஒரு குழப்பமான போட்டிகளை சந்திக்க இருக்கிறது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் வெற்றிபெற போகிறதா இல்லை மழை குறுக்கிட்டு மேலும் குழப்பத்தை கூட்ட போகிறதா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com