கோலி, கங்குலி இடையே அப்படி என்ன நடந்தது? சர்ச்சை கருத்திற்கு பிறகு சேத்தன் சர்மா ராஜினாமா!

கோலி, கங்குலி இடையே அப்படி என்ன நடந்தது? சர்ச்சை கருத்திற்கு பிறகு சேத்தன் சர்மா ராஜினாமா!

கோலி, கங்குலி இடையே அப்படி என்ன நடந்தது? சர்ச்சை கருத்திற்கு பிறகு சேத்தன் சர்மா ராஜினாமா!

தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றில் சேத்தன் சர்மா பேசியதாக, இந்திய அணி குறித்த பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்கள் வெளிவந்ததை தொடர்ந்து, தற்போது அணித்தேர்வாளர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்துவரும் சேத்தன் சர்மா, தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் கலந்து கொண்டு, இந்திய அணிக்குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்தது, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியையே ஆட்டம் காணச் செய்தது. தனியார் தொலைக்காட்சியின் இந்த புலனாய்வில் மறைமுக கேமிராவில் பதிவான தகவல்களில், நட்சத்திர பேட்டர் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த கங்குலிக்கும் இடையேயான விவகாரம், மூத்தவீரர்களான கோலி - ரோஹித் இருவருக்கும் இடையே காலம் காலமாக இருந்து வரும் ஈகோ விவகாரம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எடுத்துக்கொள்ளும் ஊசி மருந்துகள் போன்ற சர்ச்சையை கிளப்பும்படியான கருத்துகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

விராட் கோலி-கங்குலி இடையே நிகழ்ந்த கருத்து மோதல்! கோலியிடம் விருப்பம் கேட்காமலே பறிக்கப்பட்ட கேப்டன் பதவி!

கங்குலி - விராட் கோலி இடையேயான கருத்து மோதல் குறித்து பேசியிருந்த சேத்தன் சர்மா, “அணி கூட்டத்தின் போது கோலி கூறியதற்கு எதிராக கங்குலி எதிர் கருத்து தெரிவித்ததில் இருந்துதான், இருவருக்கும் இடையே மோதல் உண்டாகியது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு ஒருநாள் தொடருக்காக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதுதான் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

வீடியோ கான்ஃபரென்சிங்கில் நடந்த தேர்வுக்குழு சந்திப்பில், நான் உட்பட 9 பேர் கலந்துக்கொண்டோம். அப்போது கேப்டன்சி விலகல் குறித்து ஒரு முறை யோசியுங்கள் என கங்குலி விராட் கோலியிடம் சொன்னார். ஆனால் அதை விராட் கேட்டாரா இல்லை கங்குலி சொன்னதே விராட் கோலிக்கு தெரியாதா என்று தெரியவில்லை. கங்குலி கூறியதை விராட் கோலி கேட்டாரா இல்லையா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் கேப்டன்சி பறிபோனதில் நிச்சயம் விராட்கோலிக்கு மகிழ்ச்சியில்லை.

அதனால் தான் கங்குலியை சிக்கவைப்பதற்காகவே, “கேப்டன்சி நீக்கம் பற்றி பொதுவெளியில் அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்புதான் எனக்கே கூறினார்கள்” என அப்போது விராட் கூறியிருந்தார். ஏனெனில் கங்குலியால்தான் தன்னுடைய கேப்டன்சி பறிபோனதாக கோலி கருதுகிறார்.” என சேட்டன் சர்மா கூறியிருக்கிறார்.

கோலி-கங்குலி மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்ட அனில் கும்ப்ளே- கோலி மோதல்!

கங்குலி மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையேயான மோதல் என்பதோ இல்லை கருத்து வேறுபாடு என்பதோ, தற்போது தொடங்கியது அல்ல, அது இந்தியாவின் மூத்த வீரரான அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக இருந்தபோது, அவருக்கும் கோலிக்கும் இடையேயான கருத்து மோதலில் இருந்தே தொடங்கப்பட்டு விட்டது.

ஏனெனில் அப்போதைய நிலவரப்படி அனில் கும்ப்ளே, விராட் கோலி இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிய போது, அதனை சரி செய்வதற்காக கிரிக்கெட் ஆலோசனை கூட்டம் ஒன்று, இந்தியாவின் முன்னாள் மூத்தவீரர்களான கங்குலி, சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்சுமனன், அனில் கும்ப்ளே மற்றும் விராட் கோலி பங்கேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போதும் விராட் கோலி சமரசத்திற்கு மறுத்துவிட்டதாகவே அப்போதைய தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அனில்கும்ப்ளே, விராட் கோலி இருவரும் பிரச்சனையை மறந்துவிட்டு சேர்ந்து செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சில தினங்களிலேயே பதவியை விட்டுவிலகுவதாக அனில் கும்ப்ளே அறிவித்தார்.

விராட் கோலி - ரோகித் இடையேயான போர் இதுதான்! ஆனால் ஒருபோதும் ரோகித் கோலியை விட்டுகொடுத்தது இல்லை!

அடுத்த சர்ச்சைக்குரிய விசயமாக காலம் காலமாக இருந்து வருவது, கோலி - ரோஹித் ரசிகர்களுக்கிடையேயான யார் பெரியவர் என்ற போர் தான். ரோகித் சர்மா 2007 டி20க்கான உலகக்கோப்பை அணியில் சிறப்பாக செயல்பட்ட போதும், 2011 ஒருநாள் உலகக்கோப்பையில் இடம்பிடிக்காமல், கோலியே இடம்பிடித்திருந்தார். அப்போதே அணித்தேர்வு குறித்து ஆதங்கம் தெரிவித்திருந்தார் ரோகித் சர்மா. அதனைத்தொடர்ந்தே இரண்டு வீரர்களின் ரசிகர்களுக்கிடையேயும் யார் பெரியவர் என்ற வார்த்தை போர் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக இருந்து வருவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் கோலி- ரோகித் இடையேயான பனிப்போர் குறித்து பேசியிருந்த சேத்தன் சர்மா, “ரோஹித் சர்மாவுக்கு கங்குலி ஆதரவாக இருக்கவில்லை. ஆனால் அவருக்கு விராட் மீது பெரிதாக எந்த அபிப்ராயமும் இருந்ததில்லை. அதேவேளையில் விராட்டுக்கும் ரோஹித்துக்கும் இடையே சண்டை உள்ளது என்கிறார்கள். ஆனால் அது சண்டை இல்லை. ஈகோ முற்றல் மட்டும் தான். அதாவது அமிதாப் பச்சன் தர்மேந்திரா இடையேயான நட்சத்திர போட்டியை போல. இந்திய அணியில் ரோஹித் ஒரு குழுவுக்கும் தலைமையாகவும், விராட் ஒரு குழுவுக்கு தலைமையாகவும் இருக்கிறார்கள். ஆனால் விராட் கோலியின் கடினமான நேரங்களில் ரோகித் எப்போதும், கோலியின் பக்கம் தான் இருந்திருக்கிறார்” என கூறினார்.

வீரர்கள் உடற்தகுதி இல்லாமல் இருந்தால் ஊசி போட்டுக்கொள்வார்கள்!

மேலே கூறிய சர்ச்சைகளை எல்லாவற்றையும் விட, இந்திய அணி வீரர்கள் உடற்தகுதிக்காக ஊசி மருந்துகள் எடுத்துக்கொள்வது பற்றி சேட்டன் சர்மா பேசியது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தையே உலுக்கியிருந்தது.

வீரர்களின் உடல்தகுதி குறித்து பேசியிருந்த சேத்தன் சர்மா, “முழுமையான உடற்தகுதியை எட்டாத காயமடைந்த வீரர்கள் ஊசி மருந்துகளை எடுத்துக்கொண்டு 80% தகுதியோடு கூட போட்டியில் பங்கேற்றிருக்கிறார்கள். பும்ராவால் முதுகை வளைக்க முடியாமல் போனதால் ஊசி வழியாக ஊக்கமருந்து எடுத்துக்கொண்டும், அவரால் விளையாட முடியவில்லை. ஆனால் சில வீரர்கள் உடற்தகுதிக்காக ஊசி போட்டுக்கொண்டு விளையாடுகிறார்கள். வலி நிவாரணி மருந்துகளாக இருந்தால் அவை ஊக்க மருந்துகள் பட்டியலில் வரும். ஆகையால் வீரர்களுக்கு எந்த ஊசி ஊக்க மருந்தில் வரும் என்பது தெரியும். ஆகையால் இவ்வாறு ஊசிப் போட்டுக்கொள்வதால் அவை ஊக்க மருந்து சோதனையிலும் அகப்படாது.” என்று சேத்தன் சர்மா கூறியது புயலையே கிளப்பியது.

அணித்தேர்வாளர் பதவியை ராஜினாமா செய்த சேத்தன் சர்மா!

அணியின் உள்விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளிவந்ததை தொடர்ந்து, தனது தலைமை அணித்தேர்வாளர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவிடம் ராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதற்கு ஜெய் ஷாவும் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com