"அவர் மினி ரோகித் சர்மா! இத கத்துக்கோங்க அவங்ககிட்ட"-பாக். வீரர்களுக்கு ரமீஸ் ராஜா அறிவுரை

"அவர் மினி ரோகித் சர்மா! இத கத்துக்கோங்க அவங்ககிட்ட"-பாக். வீரர்களுக்கு ரமீஸ் ராஜா அறிவுரை
"அவர் மினி ரோகித் சர்மா! இத கத்துக்கோங்க அவங்ககிட்ட"-பாக். வீரர்களுக்கு ரமீஸ் ராஜா அறிவுரை

“இந்தியாவை அதன் சொந்தமண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதாக முடியாது. அந்தமாதிரியான ஒரு வலுவான அணியை கட்டமைத்துள்ளது இந்திய அணி. பாகிஸ்தான் அணியில் நல்ல வீரர்கள் இருந்தாலும், இந்தியாவிடம் இருந்து இதை பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா.

ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இந்தியாவை விட முன்வரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை, பேட்டிங் மற்றும் பவுலிங் என முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தொடரை 2-0 என வென்று முன்னிலையில் இருக்கிறது இந்திய அணி. என்னதான் தரவரிசை பட்டியலில் முன்னிலையில் இருந்தாலும், இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது முடியாத காரியமாக தான் அனைத்து சர்வதேச அணிகளுக்கும் கடினமாக இருந்து வருகிறது. அந்தளவு ஒரு சவாலான கோட்டையை கட்டமைத்திருக்கிறது இந்திய அணி.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்களை `களத்தில் என்ன நடக்கிறது’ என்றே கணிக்க முடியாதவாறு 15 ரன்களிலேயே அடுத்தடுத்த 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியிருந்தனர், இந்திய பந்துவீச்சாளர்கள். முகமது ஷமி மற்றும் சிராஜ் இருவரும் பவர்பிளே ஓவர்களில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் 108 ரன்களுக்கே ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி. பின்னர் 109 ரன்களை விரட்டிய இந்திய அணியில், சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி போட்டியை எளிதாகவே முடித்து கொடுத்தனர். அரைசதம் அடித்த ரோகித் சர்மா 51 ரன்களும், சுப்மன் கில் 40* ரன்களும் எடுத்து அசத்த, தொடரை 2-0 என வென்று முன்னிலை பெற்றது இந்திய அணி.

இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும்!

உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் இந்த அபாரமான செயல்பாட்டை பாராட்டியிருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா, “இந்திய பந்துவீச்சாளர்கள் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அவர்களிடம் அதிகமான வேகம் இல்லை என்றாலும் அவர்களின் சீம் பொஷிசன் மற்றும் லைன்-லெந்த் அற்புதமாக இருந்தது. தொடர்ந்து குட்-லெந்தில் பந்துவீசி பேட்டர்களை கட்டுக்குள்ளாகவே வைத்திருந்தனர்” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும், “இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எந்த ஒரு அணிக்கும் சுலபமான காரியம் அல்ல. இந்திய அணியை பார்த்து அண்டை நாட்டு அணிகளும் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக பாகிஸ்தான், அவர்கள் சிறப்பான வீரர்களை வைத்திருந்தாலும், இந்தியாவை போன்று வெற்றி நம்பர்களை எடுத்துவர முடியவில்லை. உலகக்கோப்பைக்கான வருடத்தில் இந்தியா சொந்த மண்ணில் இப்படி ஒரு திடமான நிலையை கட்டமைத்துள்ளது, முக்கிய மைல்கல்லாக இந்தியாவிற்கு அமையும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

சுப்மன் கில் ஒரு மினி-ரோகித் சர்மா!

இந்தியாவின் பேட்டிங் குறித்து பேசிய அவர், “பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களிடம் ப்ரண்ட் லைனில் ஓபனர்கள் இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். சுப்மன் கில் ஒரு ”மினி ரோகித் சர்மா”வைப் போல் இருக்கிறார். அவர் ரோகித்தை போல் ஹூக் மற்றும் புல் ஷாட்களை அற்புதமாக ஆடுகிறார். அவரால் நீண்ட நேரம் விளையாடி, பெரிய இன்னிங்ஸை ஆடமுடிகிறது. அவருடைய எனர்ஜி குறையவே இல்லை, தேவையான இடத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தையும் வெளிப்படுத்துகிறார். இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடும் பெரிய வீரராக மாறுவார் என்று தெரிகிறது” என்று பாராட்டி பேசினார்.

இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவது ”ஆஸ்திரேலியாவிற்கு இரண்டாவது ஆஸஸ்” போல!

முன்னதாக இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து கூறியிருந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், “ இந்தியாவை அதன் சொந்தமண்ணில் எதிர்த்து விளையாடுவதும், ஆஸஸ் தொடரில் விளையாடுவதும் ஒன்றுதான்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தியா தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும்!

இந்தியா 3ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தினால், தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தை பிடிக்கும் என்று ஐசிசி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com