”திரும்பி வந்துட்டனு சொல்லு”.. 5 மாதங்களுக்கு பின் ரிட்டன்.. 5 விக்கெட்டுகளை அள்ளிய ஜடேஜா!

”திரும்பி வந்துட்டனு சொல்லு”.. 5 மாதங்களுக்கு பின் ரிட்டன்.. 5 விக்கெட்டுகளை அள்ளிய ஜடேஜா!
”திரும்பி வந்துட்டனு சொல்லு”.. 5 மாதங்களுக்கு பின் ரிட்டன்.. 5 விக்கெட்டுகளை அள்ளிய ஜடேஜா!

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து அபாராமாக விளையாடி வருகிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் விலகிய ரவீந்திர ஜடேஜா, அதன்பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரிலும் விளையாடவில்லை. மேலும், எந்த சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் ரவீந்திரா ஜடேஜா காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சில மாதங்கள் ஓய்வில் இருந்தார் ஜடேஜா.

அதன்பிறகு காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அணியில் தேர்வு செய்யப்பட்டார். எனினும், அவரது உடல் திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், பிசிசிஐ உத்தரவின்படி, கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு ரஞ்சியில் முதல் முறையாக தமிழ்நாடு அணிக்கு எதிராக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையிலானப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு தலைமை தாங்கி ஜடேஜா விளையாடினார்.

அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த ஜடேஜா, இரண்டாவது இன்னிங்சில் 17.1 ஓவர்கள் வீசி 53 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதன்மூலம் தனது உடல் தகுதியை நிரூபித்து, டெஸ்ட் தொடரில் ‘தான் உள்ளேன்’ என்பதை உறுதி செய்திருந்தார். 

இந்தநிலையில் தான், சொந்த மண்ணில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியுள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா களமிறக்கப்பட்டுள்ளார். 5 மாதங்களுக்குப் பிறகு களமிறங்கினாலும், முக்கிய வீரர்களான லாபஸ்சாக்னே (49), ஸ்டீவ் ஸ்மித் (37), மேட் ரென்சா (0), மர்பி (0), பீட்டர் ஹேட்ஸ்ஹோம் ஆகிய 5 பேரின் விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்தியுள்ளார்.

22 ஓவர்களுக்கு 8 மெய்டன்களுடன், 47 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன் ரேட்டையும் கட்டுப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் என்ன விதமான கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் அஸ்வினும் தன்னுடைய பங்கிற்கு 2 விக்கெட்டுகளை சாய்க்க ஆஸ்திரேலிய அணி 60 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி 2 ரன்களுக்கே வார்னர், கவாஜா ஆகியோரின் விக்கெட்டை இழந்த போதும் அணியை சரிவில் இருந்து ஸ்மித் - மர்னஸ் லபுஸ்சக்னே இணை மீட்டது. ஒரு கட்டத்தில் இந்த இணை நங்கூரம் போல் விக்கெட்டை இழக்காமல் விளையாடியதால் 300 ரன்களுக்கு மேல் அடிக்க வாய்ப்புள்ளதாக தெரிந்தது.

இந்த சூழலில்தால் ஜடேஜா தன்னுடைய மாயாஜால பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்தார். 49 ரன்களில் லபுஸ்சக்னேவை வீழ்த்தினார். ஸ்மித் விக்கெட்டையும் அவரே எடுத்தார். ஜடேஜாவின் அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணி தற்போது உற்சாகத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com