வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் சிதறிய பாகிஸ்தான் - 105 ரன்னில் சுருண்டது

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் சிதறிய பாகிஸ்தான் - 105 ரன்னில் சுருண்டது

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் சிதறிய பாகிஸ்தான் - 105 ரன்னில் சுருண்டது
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்தில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹாக், பஹர் ஜமான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

தொடக்கத்தில் ஜமான் அடித்து விளையாடினார். இமாம் உல் ஹாக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிடியாக விளையாடிய ஜமான் 16 பந்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

இதன்பிறகு பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தது. யாருமே 30 ரன்களை கடக்கவில்லை. பாபர் அசாம் 22, ஹரிஸ் சோஹில் 8, சர்பராஸ் அகமது 8, முகமது ஹபிஸ் 16, இமாத் வாசிம் 1 ரன் என அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். 83 ரன்களுக்கே பாகிஸ்தான் 9 விக்கெட்டை இழந்தது.

அதனால், பாகிஸ்தான் அணி நிச்சயம் 100 ரன்களை எட்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்டத்தில் வஹாப் ரியாஸ் அதிரடி காட்டினார். ஹோல்டர் வீசிய 21வது ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். சோர்வடைந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இது ஆறுதலாக இருந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ரியாஸ் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பை தொடரில் இது இரண்டாவது மோசமான ஸ்கோர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் 4 விக்கெட் சாய்த்தார். அதேபோல், ஹோல்டர் 3, ரஸல் 2 விக்கெட்டை எடுத்தனர். ரஸல் 3 ஓவர்கள் வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் சாய்த்தார். 106 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயில், ஹோப், பிராவோ, ரஸல், ஹெட்மயர் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால், இந்த இலக்கை அந்த அணி எளிதில் எட்டிவிடும் என்று தெரிகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com