உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய, தவான், விஜய் சங்கர் ஆகியோர், வெஸ்ட் இண்டீஸூக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி களில் விளையாட இருக்கிறது. இதற்கான அணி தேர்வு, நாளை நடைபெறுகிறது. இதில், கேப்டன் விராத் கோலிக்கு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படும் என்றும் அவருக்குப் பதிலாக துணை கேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. தோனிக்கு வாய்ப்பிருக்குமா என்பது தெரியவில்லை. அவர் அணியில் சேர்க்கப் பட்டாலும் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படாது என்று கூறப்படுகிறது. பதிலாக ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பிங் செய்வார் என்கிறார்கள்.
இதற்கிடையே, உலகக் கோப்பைத் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படுவார்களா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் தவானுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பரிசோதனை நடந்தது என்றும் அவர் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு பற்றி மருத்துவர்கள் சோதித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் காயம் ஆறிவிட்டதா, இல்லையா என்கிற தகவல் வெளியிடப்படவில்லை. இதே போல காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய, விஜய் சங்கரும் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்றார். அவரது காயத்தின் தன்மை குறித்தும் அங்கு பரிசோதிக்கப்பட்டது. அவரும் அணியில் சேர்க்கப்படுவாரா, இல்லையா? என்பதும் தெரியவில்லை.

