காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை
தென்ஆப்ரிகாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் சேலத்தை சேர்ந்த வீராங்கனை நிவேதா சப் ஜுனியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன்-சித்ரா தம்பதியின் மகள் நிவேதா. சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் நிவேதா, தென்ஆப்ரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தந்தை வெங்கடேஸ்வரன் உடற்பயிற்சிக்கு செல்லும்போது பொழுதுபோக்காக உடன் சென்ற நிவேதா சிறுவயதிலேயே தானும் தந்தையை போல் உடற்பயிற்சி செய்ய ஆர்வம் காட்டியுள்ளார். இதனை ஊக்குவித்த வெங்கடேஸ்வரன், மகள் நிவேதாவிற்கு முறையான பயிற்சி கொடுக்க தொடங்கினார். மகளின் ஆர்வமும் தந்தையின் ஈடுபாடும் ஒரு சாதனை மங்கையை உருவாகியுள்ளது என்றால் அது மிகையல்ல. போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரத்யேக பயிற்சி ஏதும் மேற்கொள்ளாமல், தன் தந்தையின் வழிகாட்டுதலில் மட்டுமே பயிற்சி எடுத்த நிவேதா பல போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ளார்.
ஆசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற நிவேதாவின் அடுத்த கனவு காமன்வெல்த். அதற்காக இடைவிடா பயிற்சி எடுத்த நிவேதா தற்போது அந்த கனவையும் நனவாகியுள்ளார் என்று பெருமிதம் கொள்கிறார் நிவேதாவின் தாயார் சித்ரா. நிவேதாவின் சாதனை தனக்கும் உற்சாகத்தை கொடுப்பதாகவும், தானும் விரைவில் பதக்கங்களை வெல்வேன் என்று நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொள்கிறார் நிவேதாவின் தங்கை சோனாலட்சுமி.