“இனிமேல் ரிஷாபை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” - விராட் கோலி
இந்திய அணி எதிர்காலத்தில் ரிஷாப் பண்ட்-டையே கீப்பராக சேர்க்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கில் இந்திய அணி இளம் கீப்பர் ரிஷாப் பண்ட் 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதன்மூலம் இந்திய அணி எளிமையான வெற்றியை பதிவு செய்தது.
போட்டியின் வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, “இது ஒரு தெளிவான ஆட்டம். நாங்கள் எதுபோன்ற ஒரு முடிவை கொண்டுவர நினைத்தோமோ, அதையே அடைந்தோம். தீபக் சாஹர் இன்று ஒருபடி உயர்ந்துள்ளார். அனைத்து பவுலர்களுமே சிறப்பாக செயல்பட்டனர்.
கடந்த போட்டியைவிட இந்தப் போட்டியில் நன்றாக விக்கெட்டுகளை சாய்த்தனர். புவனேஸ்குமார் போல புது பந்திலும் தீபக் நன்றாக பந்துவீசினார். ரிஷாப் பண்டை நாங்கள் இனி வரும் காலத்திலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அவரிடம் நிறைய திறமைகள் இருக்கின்றன. அவருக்கு அழுத்தம் கொடுக்காமல் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்தால் அதனை பெறலாம். அவர் எங்களுடன் நீண்ட தூரம் பயணிப்பார். அவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கும் கொண்டு செல்கிறோம்” என்றார்.