“விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜமானது” - படுதோல்வி குறித்து தீப்தி ஷர்மா உருக்கமான பேட்டி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0 - 4 என்ற கணக்கில் இழந்துள்ளது இந்தியா. இந்த நிலையில் அணியில் உள்ள வீராங்கனைகள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஊக்குவித்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார் அணியின் துணை கேப்டன் தீப்தி ஷர்மா.
“விளையாட்டில் வெற்றி மற்றும் தோல்வி என்பது சகஜமானது. ஆனால் இங்கு அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஊக்குவித்து கொண்டு வருகின்றனர். நிச்சயம் இது எதிர்வரும் போட்டிகளில் நம்பிக்கையை கொடுக்கும். உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் வீராங்கனைகளுக்கு நம்பிக்கை மிகவும் முக்கியம்” என தெரிவித்துள்ளார் அவர்.
வரும் மார்ச் 4 தொடங்கி ஏப்ரல் 3 வரையில் நியூசிலாந்து நாட்டில் 12-வது மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா கடந்த 2017 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை பைனலில் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டத்தை இழந்திருந்தது. இந்த முறை நியூசிலாந்து நாட்டில் உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ள காரணத்தால் கடந்த முறையை போலவே இந்த முறையும் அசத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.