ஏன் தோற்றோம்? விராத் கோலி பேட்டி

ஏன் தோற்றோம்? விராத் கோலி பேட்டி

ஏன் தோற்றோம்? விராத் கோலி பேட்டி
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று பெங்களூரு கேப்டன் விராத் கோலி கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று பெங்களூரை அணியை எதிர்கொண்டது. புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. டுபிளிசிஸ், கரண் ஷர்மா, ஆசிப் நீக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, துருவ் ஷோரி சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி, சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சால் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர் பார்த்தீவ் படேல் அதிகப்பட்சமாக 41 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். மெக்கல்லம், கேப்டன் விராத் கோலி, டி வில்லியர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி கட்டத்தில் வேகமாக ரன்கள் சேர்த்த வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி 36 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னைத் தரப்பில் கடந்த போட்டிகளில் சொதப்பிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன் 11 ரன்களும், ராயுடு 32 ரன்களும் எடுத்தனர். ரெய்னா 25 ரன்கள் எடுத்தார். சென்னை அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. தோனி 31 ரன்களுடனும், பிராவோ 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஏழு வெற்றிகளைப் பெற்றுள்ள சென்னை அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளது


பெங்களூரு கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘ இன்றைய நாள் எங்களுக்கானதாக இல்லை. விரைவில் அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இரண்டாம் பாதியில் கடுமையான முயற்சி செய்தோம். சில கேட்ச்களை தவற விட்டோம். இது தோல்வியடைய வைத்துவிட்டது. இந்த பிட்ச் ஆச்சரியமளித்தது. எங்கள் வீரர்களும் சிறப்பாகப் போராடினார்கள். இருந்தும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். தோனி சிறப்பாக விளையாடினார். அவர்கள் வெற்றிக்குத் தகுதியானவர்கள். மீதமுள்ள 5 போட்டிகளில் நான்கு போட்டிகளை கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலைகள் எங்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும். அடுத்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்’ என்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com