"நாங்கள் சம உரிமையை மட்டுமே கேட்கிறோம்" - நிறவெறி குறித்து பிராவோ !

"நாங்கள் சம உரிமையை மட்டுமே கேட்கிறோம்" - நிறவெறி குறித்து பிராவோ !
"நாங்கள் சம உரிமையை மட்டுமே கேட்கிறோம்" -  நிறவெறி குறித்து பிராவோ !

நாங்கள் பழிவாங்குவதில்லை; சம உரிமையை மட்டுமே கேட்கிறோம் என்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவா இனவெறி தொடர்பான கருத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் 46 வயது நிரம்பிய ஜார்ஜ் ஃப்ளையாட் என்பவர் கடந்த மே 25ஆம் தேதி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவலர்கள் அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்றதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அமெரிக்காவில் மிகப்பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்கு உலகின் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இனவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரென் சமி தானும் ஐபிஎல் போட்டியின்போது, இனவாதத்திற்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தார். ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது தன்னையும், இலங்கை வீரர் பெராராவையும் சிலர் ‘கலு’ என்று அழைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அப்போது அந்த வார்த்தைக்கு அர்த்தம் ‘கறுப்பு நிறத்தைச் சேர்ந்த வலுவான நபர்’ என நினைத்துக் கொண்டிருந்ததாகவும், பின்னர் அது கறுப்பினத்தைக் கிண்டல் செய்து கூறப்பட்ட வார்த்தை எனத் தெரிந்து வருந்தியதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இனவாதம் தொடர்பான கருத்தை பிராவோ கூறியிருக்கிறார் அதில் "உலகளவில் நடத்தப்படும் நிறவெறித் தாக்குதல்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. ஒரு கறுப்பின மனிதனாக, உலக வரலாற்றில் கறுப்பினத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியும். ஆனாலும் எப்போதும் நாங்கள் பழிவாங்க வேண்டும் என்று கேட்கவில்லை. எப்போதும் மரியாதைக்கும் சம உரிமைக்குமே நாங்கள் குரல் கொடுக்கிறோம். அவ்வளவுதான். நாங்கள் மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். ஆனால் எங்கள் மீது மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது" என்றார்.

மேலும் அவர் "எனது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். நாங்களும் பலம் வாய்ந்தவர்களாகவும் அழகானவர்களாகவும் இருக்கிறோம். உலகளவிலும் மாபெரும் மனிதர்களைப் பாருங்கள். நெல்சன் மண்டேலா, முகமது அலி, மைக்கேல் ஜோர்டன் உள்ளிட்டவர்கள் எங்களின் முன்னோடிகளாக இருக்கிறார்கள். இதுவரை நடந்தது போதும். எங்களுக்குச் சம உரிமை வேண்டும். எங்களுக்குப் பழிக்குப் பழி வேண்டாம். போர் வேண்டாம். எங்களுக்கு மரியாதைதான் வேண்டும். ஒரு மனிதர் எப்படிப்பட்டவராக இருக்கிறாரோ, அவரை அப்படியே ஏற்றுக் கொண்டு அன்பு செலுத்த வேண்டும். அதுதான் மிக முக்கியமானது" என உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்துள்ளார் பிராவோ.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com