ஆனாலும் இந்த கத்தார் ரொம்ப ஸ்டிரிக்ட் தாம்பா! ரசிகர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா!!
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் காணவரும் ரசிகர்களுக்கு சில விதிமுறைகளை கத்தார் அரசு அறிவித்துள்ளது. அவை யாவை எனத் தற்போது பார்க்கலாம்.
உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவைக் காண கத்தார் நாட்டுக்கு லட்சக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஹயா எனும் சிறப்பு பாஸ் மற்றும் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் 3 பேர் வரை தங்களுடன் அழைத்துச் செல்லலாம். ஆனால், அவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக 500 கத்தார் ரியால், அதாவது இந்தியத் தொகையில் சுமார் 12 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.
மது, போதை பொருட்களுக்கு தடை!
21 வயதுக்கு உட்பட்ட வெளிநாட்டவர் கத்தாரில் மது அருந்தவும், போதைப் பொருட்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பன்றி இறைச்சி மற்றும் ஆபாசமான எந்தவொரு பொருளையும் கொண்டுவர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்பந்து போட்டிகளைக் காண கத்தார் வரும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளானால், காவல்துறையினரை தொடர்பு கொள்வதற்கு முன்னர் தங்கள் நாட்டு தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வரம்பு மீறினால் தண்டனை - எச்சரிக்கை
கத்தாரில் தன்பாலின உறவுகள் குற்றம் என்றாலும், LGBT உட்பட திருமணமாகாத வெவ்வெறு பாலினங்கள் ஒரே அறையில் தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் திருமணமானவர்கள் பொது இடங்களில் வரம்பு மீறி நடந்து கொண்டால் தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து போட்டி ஆரம்பமான முதல் இரண்டு வாரங்களுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் பகுதிகளுக்கு ரசிகர்கள் சுலபமாக சென்றுவர சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் கவனத்திற்கு..
தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் சென்றால் 500 ரியால் வரை, அதாவது இந்தியத் தொகையில் சுமார் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ரசிகர்கள் முதல் 10 நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.