“கண்ணை மூடிகிட்டு அடிப்பான்” வழிகாட்டிய தோனி..அசத்திய சைனா மேன்

“கண்ணை மூடிகிட்டு அடிப்பான்” வழிகாட்டிய தோனி..அசத்திய சைனா மேன்

“கண்ணை மூடிகிட்டு அடிப்பான்” வழிகாட்டிய தோனி..அசத்திய சைனா மேன்
Published on

இந்திய கிரிக்கெட் அணியில் தன்னுடைய இருப்பின் முக்கியத்துவத்தை மகேந்திர சிங் தோனி தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் எளிதில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 38 ஓவரில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வில்லியம்சன் 64 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குல்தீப் 4 விக்கெட்களையும், சமி 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 34.5 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஷிகர் தவான் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் போது தோனி இரண்டு முக்கிய விஷயங்களை நிகழ்த்தியுள்ளார். ஒன்று தன்னுடைய மின்னல் வேக ஸ்டம்பிங். 9வது விக்கெட்டாக பெர்குசனை அவர் தன்னுடைய பாணியில் ஆட்டமிழக்கச் செய்தார். வழக்கம் போல் பேட்ஸ்மேனின் காலிற்கும், க்ரீஸுக்கும் நூலிழை தான் இடைவெளி. இந்த ஸ்டம்பிங் படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல்.

மற்றொன்று, போல்ட் விக்கெட். 38வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அப்போது கடைசி பந்தில், தோனி ஸ்டம்பிற்கு பின்னால் இருந்தவாறு சில அறிவுரைகளை வழங்குகிறார். அதாவது, “அவன் கண்ணை மூடிகிட்டு அடிப்பான், நீ ரவுண்ட் பால் போடு” என்று அவர் கூறியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.

தோனி சொன்னபடியே குல்தீப் பந்துவீச ஸ்சிலிப்பில் நின்ற ரோகித்திடம் கேட்ச் கொடுத்து போல்ட் அவுட் ஆனார். இதுதான், தோனியின் மேஜிக். ஆட்டத்தின் தன்மையை எப்படி அவர் புரிந்து வைத்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று. 

தோனி வழிகாட்டுதலின்படி குல்தீப் விக்கெட் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றது. தோனியின் ரசிகர்கள் பலரும் அதனை வியந்து பாராட்டி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com