“கால்பந்து உயிர்தான்..ஆனா கடமைனு வந்துட்டா” குரோஷிய வைரல் வீடியோவின் பின்னணி

“கால்பந்து உயிர்தான்..ஆனா கடமைனு வந்துட்டா” குரோஷிய வைரல் வீடியோவின் பின்னணி

“கால்பந்து உயிர்தான்..ஆனா கடமைனு வந்துட்டா” குரோஷிய வைரல் வீடியோவின் பின்னணி
Published on

குரோஷியா அணி தன்னுடைய கால்பந்தாட்ட வரலாற்றில் முதன் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல், அர்ஜெண்டினா, பிரேசில் போன்ற அணிகள் காலிறுதியையே தாண்ட முடியாத நிலையில் குரோஷியா அணி அசத்தலாக விளையாடி இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. 

இந்நிலையில், ரஷ்யா அணியுடன் குரோஷியா மோதிய காலிறுதிப் போட்டியின் போது அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் கடமையுணர்ச்சியுடன் நடந்து கொண்டதாக வெளியான வீடியோ சிலிர்க்க வைத்துள்ளது. 

குரோஷியா தீயணைப்பு வீரர்கள் சிலர் தங்களது அலுவலகத்தில் ஆர்வமாக தங்கள் அணி விளையாடும் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது போட்டி முடிவடையும் தருணம். வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி ஷுட் வாய்ப்பு குரோஷியா அணிக்கு கிடைத்தது. திக்..திக்..திக் ஆன நிமிடங்கள் அது. சில நொடிகளில் குரோஷியா வெற்றி பெறுமா இல்லையா என்பது தெரிந்து விடும். அப்பொழுது பார்த்து விபத்தை எச்சரிக்கும் அலாரம் அடித்தது. எச்சரிக்கை மணி அடித்த அடுத்த நொடியே தீயணைப்பு வீரர்கள் பதறி அடித்து ஓடினர். மளமளவென தங்களது தீயணைப்பு ஆடைகளை அணிந்தனர். அவ்வளவு வேகம். உடனே கண் இமைக்கும் நேரத்தில் எல்லோரும் கிளம்பி சென்றுவிட்டார்கள்.

அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த டிவி மட்டும் தனியாக இருந்தது. அப்போது, விடுமுறையில் இருந்த வீரர்கள் இருவர் மட்டும் பெனால்டி ஷூட்டை பார்த்தனர். குரோஷியா வீரர் வெற்றிக்கான அந்த கோல் அடித்ததும் அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பார்ப்பவர்களுக்கு தீயணைப்பு வீரர்களின் கடமை உணர்ச்சி மிரளவைக்கிறது. ஒரிரு நிமிடங்கள் இருந்தால் போட்டியின் முடிவை பார்த்து இருக்கலாம். ஆனால், வீரர்கள் தங்களது கடமை உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என பலரும் பாராட்டத் தொடங்கி விட்டனர். சிலர் அப்படியெல்லாம் சாத்தியமில்லையே என கேள்வியும் எழுப்பினர்

ஆனால், இந்த வீடியோ உண்மையிலேயே நடந்த சம்பவம் இல்லை என்பதை குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் தீயணைப்புத் துறை தனது ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளது.  அந்த வீடியோ முழுக்க முழுக்க ஜாலியான வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. . தீயணைப்பு துறை தெரிவிக்கும் போது’ நாங்கள் தீயோடு பணி புரிகிறோம்;  மக்கள் இன்று போட்டியின் கடைசியில் அனல்பறக்கும் கால்பந்தாட்டத்தை பார்த்துக் கொண்டு இருக்கலாம், அதே நேரத்தில் தீப்பற்றும் வகையிலான பொருட்களை கவனமோடு கையாள வேண்டும் என கூறியுள்ளனர். உண்மையிலேயே இப்படி ஒரு அவசர அழைப்பு வந்திருந்தால் அவர்கள் எப்படி தீயாய் வெலை பார்ப்பாரகள் என்ற எண்ணத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதே தவிர அது உண்மை நிகழ்வு அல்ல . குரோஷியா அணி தற்போது இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா மோதுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com