அடுத்த ’யோ-யோ’ டெஸ்ட் வரட்டும்..! வாஷிங்டன் சுந்தர் உறுதி
’யோ- யோ’ டெஸ்ட்டுக்கு என்னை மீண்டும் அழைத்தால் கண்டிப்பாக அதில் வெற்றிபெறுவேன் என்று இளம் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கூறினார்.
தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். ஆல்-ரவுண்டரான இவர் தமிழ்நாடு கிரிக்கெட் லீக்கில் சிறப்பாக விளையாடியதை அடுத்து ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்பட்டார். அங்கும் தனது திறமையை நிரூபித்ததால், இப்போது ரஞ்சி போட்டியில் விளையாடிவருகிறார். முன்னதாக துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடியதால், ஆஸ்திரேலிய அணி தொடருக்கு அவரை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவருக்கு யோ- யோ உடல் தகுதி டெஸ்ட் நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெறாததால் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் திரிபுரா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ரஞ்சி போட்டியில் அவர் 156 ரன்கள் (223 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) குவித்தார்.
இதையடுத்து நிருபர்களிடம் அவர் பேசும்போது, ’முதல் தர போட்டியில் நான் அடித்த முதல் செஞ்சுரி இது. இந்தப் போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினேன். தொடர்ந்து வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக்கொள்வேன். கடந்த முறை நடந்த யோ-யோ டெஸ்ட்டில் எனக்கு சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை. அதற்கான பயிற்சியில் இப்போது இறங்கி இருக்கிறேன். இன்னொரு முறை அந்த டெஸ்ட்டுக்கு அழைப்பு வந்தால் கண்டிப்பாக வெற்றிபெறுவேன்’ என்றார்.