‘மன்கட்’ முறையில் ஆட்டமிழக்க செய்யக் கூடாதா? - தோனி, கோலி முடிவு என்ன?
‘மன்கட்’ முறை வேண்டாமென தோனி, கோலி கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில், பட்லரை ‘மன்கட்’ முறையில் அஸ்வின் ரன் அவுட் செய்தார். பட்லரின் இந்த விக்கெட் அந்த அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது.
ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரன்னர் க்ரீஸை விட்டு வெளியே வந்தால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதிதான் ‘மன்கட்’ முறை. இப்போது அஸ்வின் செய்த இந்த ரன் அவுட்டால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. அஸ்வின் செய்தது தவறு, அவர் கிரிக்கெட்டை அசிங்கப்படுத்திவிட்டார் என்ற ரீதியில் கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான தகவல் ஒன்றினை பதிவிட்டுள்ளார். , “நான் கலந்து கொண்ட கேப்டன்கள், நடுவர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றில், மரியாதை நிமிர்த்தமாக பேட்ஸ்மேன்களை ‘மன்கட்’ முறையில் ஆட்டமிழக்க செய்யக் கூடாது என முடிவு செய்யப்பட்டதாக நினைவில் இருக்கிறது.
அநேகமாக அந்தக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தோனி, விராட் கோலி இருவரும் கலந்து கொண்டிருந்தார்கள்” என்று ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.