'இஷான் கிஷனின் இரட்டை சதத்திற்கு பின் நம்பிக்கை தகர்ந்தது' - ஷிகர் தவான்

இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசும் வரை மீண்டும் கம்பேக் கொடுக்கும் நம்பிக்கை இருந்ததாகவும், அதனை பார்த்த பின் அந்த நம்பிக்கை தகர்ந்ததாகவும் கூறியுள்ளார் ஷிகர் தவான்.
'இஷான் கிஷனின் இரட்டை சதத்திற்கு பின் நம்பிக்கை தகர்ந்தது' - ஷிகர் தவான்

ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து பல அபாரமான தொடக்கங்களை அமைத்து கொடுத்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் ஷிகர் தவான். இச்சூழலில், கடந்த சில ஆண்டுகளாக தனது ஃபார்மை இழந்தது மற்றும்  இளம் வீரர்களின் துடிப்பான ஆட்டத்தால் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் அவர்.

இந்நிலையில், தனது இடம் பறிபோனது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஷிகர் தவான், ''இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நான் இருந்தாலும் எனக்கு பதிலாக சுப்மன் கில்லையே தேர்வு செய்வேன்.

ஏனென்றால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் உச்சபட்ச ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா கேப்டன்சியை எடுத்துக் கொண்ட போது, அவரும் டிராவிட்டும் எனக்கு முழு ஆதரவையும் கொடுத்தனர்.

2022ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பில் சிறப்பாக செயல்படும் போது, நடப்பவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசுவதற்கு முன்வரை, எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றே நினைத்தேன். ஆனால் இரட்டை சதத்திற்கு பின், அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

இது எனக்கு மட்டுமல்ல, இதற்கு முன் பலருக்கும் நடந்திருக்கிறது. அதனால் இதனை பெரிதுபடுத்த தேவையில்லை'' என்று தெரிவித்துள்ளார். ஷிகர் தவானின் இந்த முதிர்ச்சியான பதிலை கேட்டு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com