ஐபிஎல் ஏலம்: இறுதிப்பட்டியலில் 292 வீரர்கள் தேர்வு!
ஐபிஎல் 2021 டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க இறுதியாக 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்யலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த வாரம், 1,097 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருப்பதாக முதல்கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான வீரர்களின் பெயர்களை அணிகள் தேர்வு செய்தன. இதனால் தற்போது ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 292 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில், முதற்கட்டப் பட்டியலில் இடம்பெறாத 17 புதிய வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். அணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த 17 வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் உள்ள வீரர்களே ஏலத்தில் கலந்துகொள்வார்கள்.
இதில் மொத்தம் 292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யவேண்டும். இறுதிக் கட்டப் பட்டியலில் 164 இந்திய வீரர்களும் 125 வெளிநாட்டு வீரர்கள் மூன்று அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியில் ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உள்பட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
மேலும் ரூ. 1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்களும் ரூ. 1 கோடியில் 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். பிப்ரவரி 18 அன்று மாலை 3 மணிக்கு ஐபிஎல் ஏலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

