ஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக்கொள்வதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளதால் பிசிசிஐ-க்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் முடிவுக்கு பிசிசிஐ வந்திருக்கிறது. இருப்பினும் இந்த ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்ஸர் நிறுவனங்கள் நிராகரிக்கப்படும் என தகவல்கள் கசிந்தன. இதை மறுத்த பிசிசிஐ, ஸ்பான்ஸர்ஷிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக்கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தெரிவித்துள்ளது. அதேசமயம் அடுத்த ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களின் ஸ்பான்ஸர்ஷிப்பினை தொடர விரும்புவதாகவும் விவோ கூறியுள்ளது. இதனால் பிசிசிஐக்கு பொருளாதார சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஏனென்றால் இந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப்பில் விவோ நிறுவனத்தின் பங்கு ரூ.440 கோடியாகும். ஐபிஎல் தொடர் தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில், அதற்குள் ரூ.440 கோடிக்கு புதிய ஸ்பான்ஸரை பிடிப்பது பிசிசிஐ-க்கு பெரும் சவலாக அமையும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக இந்திய- சீனா எல்லைப் பிரச்னையில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்ப்டடது. அதேபோல சீன பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற முழக்கங்களும் எழுந்தன.

