கொரோனா நிவாரண நிதியை திரட்ட ’செஸ்’ விளையாடும் விஸ்வநாதன் ஆனந்த், 4 கிராண்ட் மாஸ்டர்கள்
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நிவாரண பணிக்கான நிதியை திரட்ட சதுரங்க ஆட்டம் விளையாட உள்ளனர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கொனேரு ஹம்பி, துரோணவல்லி ஹரிகா, நிஹால் சரின், பிரக்ஞானந்தா என 4 கிராண்ட் மாஸ்டர்கள். ஆன்லைன் மூலம் இந்த சதுரங்க விளையாட்டில் அவர்கள் விளையாட உள்ளார்கள்.
“இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதி திரட்ட உள்ளோம். அதனால் நான் மற்றும் இந்தியாவின் சிறந்த நான்கு கிராண்ட் மாஸ்டர்களுடன் நீங்கள் நன்கொடை செலுத்தி விட்டு விளையாடலாம். வரும் வியாழன் அன்று இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்தியா சதுரங்க சமூகம் முன்னெடுத்துள்ள முயற்சி இது. நிச்சயம் நாங்கள் எண்ணிய படி நல்ல நிதியை திரட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சதுரங்க தரவரிசையில் 2000 புள்ளிகளுக்கு கீழ் உள்ள வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாட 150 அமெரிக்க டாலர்களும் மற்றும் நால்வருடன் விளையாட விரும்புபவர்கள் 25 அமெரிக்க டாலர்களும் நன்கொடையாக செலுத்தி இந்த விளையாட்டில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.