"ஆட்டத்தை எப்படி முடிப்பதென கோலியிடம் கற்றுக்கொள்ளுங்கள்”- இஷான், பண்ட்க்கு சேவாக் அட்வைஸ்
சரியான துவக்கம் அமைந்த பிறகு அதை எப்படி பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்ற நுணுக்கத்தை விராட் கோலியிடம் இருந்து இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் கற்றுக்கொள்ள வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 வது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தொடக்க வீரர் இஷான் கிஷான் தனது முதல் போட்டியிலே அரைசதம் கடந்தார். இதனால் அறிமுகமாகிய முதல் போட்டியிலே அரைசதம் கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
32 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்த இஷான். ரஷீத்தின் சுழற்பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதேபோல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல், 49 பந்துகளில் 73 அடித்து அசத்தினார். இவர் மொத்தம் 81 டி20 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 22 முறை அவுட் ஆகாமல் களத்தில் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் “இஷான் கிஷன் ஐபிஎல்லில் விளையாடுவது போலவே சர்வதேச போட்டியிலும் விளையாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில், அறிமுக வீரர்கள் பதற்றமடைகிறார்கள். ஆனால் இஷான் கிஷன் அப்படித் பதற்றமடையவில்லை. அது ஒரு நல்ல விஷயம்.
இந்தியாவுக்கு எல்லாம் சரியாக நடந்தது. துவக்க ஆட்டத்தில் இறங்குபவர்கள் சரியாக விளையாடினால் பின்னால் இறங்குபவர்களுக்கு அது உதவுகிறது. இது கிஷனுக்கு ஒரு அற்புதமான இன்னிங்ஸ்.
விராட் கோலி ஒரு போட்டியில் சிறப்பான துவக்கத்தை அமைத்துவிட்டால் கடைசிவரை களத்தில் நீடித்து ரன்களை குவிப்பார். சரியான துவக்கம் அமைந்த பிறகு அதை எப்படி பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்ற நுணுக்கத்தை விராட் கோலியிடம் இருந்து இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கற்றுக்கொள்ள வேண்டும். சச்சினும் இதையேதான் செய்வார். விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கு போட்டிகளை எப்படி முடிக்க வேண்டும் என்பது தெரியும்” என்றார்.