குடிபோதையில் இருந்த வீரர் யார் என்பதை சாஹல் தெரியப்படுத்த வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
குடிபோதையில் 15-வது மாடி பால்கனியிலிருந்து தொங்கவிட்ட வீரர் யார் என்றும், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் சாஹல் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கேட்டுக்கொண்டுள்ளார்.
2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில் கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகளும் பிளே ஆஃப் சுற்றில் இடம் பிடிக்க, அதிக முனைப்பு காட்டிவருகிறது. ஐபிஎல் போட்டி ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும்நிலையில், முன்னாள், இந்நாள் வீரர்கள் தங்களது அனுபவங்களை கூறுவது, ரசிகர்களிடையே தனிக் கவனம் பெறும்.
அந்தவகையில், ராஜஸ்தான் அணியில் தற்போது விளையாடி வரும் சாஹல், நேற்று தனது அணியுடன் கலந்து உரையாடியபோது கூறிய சம்பவம் அதிர்ச்சி அளித்தது. அவர் கூறியதாவது, “நிறைய பேருக்கு இந்த சம்பவம் குறித்துத் தெரியாது. அது 2013-ஆம் ஆண்டு. அப்போது நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிக் கொண்டிருந்தேன். பெங்களூரில் ஒரு போட்டி. அது முடிந்ததும் கெட்-டூ-கெதர் வைத்திருந்தனர்.
அப்போது ஒரு வீரர் நன்றாக குடித்திருந்தார். அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அவர் தன்னிலையிலேயே இல்லை. என்னைப் பார்த்த அவர் அருகில் கூப்பிட்டார். பின்னர் அருகில் இருந்த பால்கனிக்கு அழைத்துச் சென்ற அவர் என்னை அப்படியே தூக்கி பால்கனியிலிருந்து தொங்க விட்டார். எனக்கு உயிரே போனது போல ஆகி விட்டது.
அது 15-வது மாடி. எனது கைகள் அவரது கழுத்தை இறுக்கமாக பிடித்திருந்தன. கொஞ்சம் நழுவினாலும் அவ்வளவுதான். அதேபோல அவர் நழுவ விட்டாலும் நான் செத்தேன். அந்த சமயத்தில் வேறு சில வீரர்கள் இதைப் பார்த்து விட்டு ஓடி வந்து அந்த வீரரிடமிருந்து என்னை மீட்டனர். எனக்கு மயக்கமே வந்து விட்டது. என்னை அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தனர். நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த சம்பவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது, நாம் எங்கிருந்தாலும், என்ன நிலையில் இருந்தாலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதே. அந்த சமயத்தில் நானோ அல்லது அந்த வீரரோ சிறு தவறு செய்திருந்தாலும் எனது உயிரே போயிருக்கும்'' என்றார் சாஹல்.
இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர் யார் என்று கூறுங்கள் என்று ட்விட்டரில் கேட்டுவந்தனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முன்னாபாய்’ படத்தில் சஞ்சய் தத் ஒருவரை பால்கனியில் இருந்து தொங்கவிடுவது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, குடிபோதையில், சாஹலிடம் அவ்வாறு நடந்து கொண்டது யார் என்று தெரிவது முக்கியம்.
அதனால் அவர் யார் அந்த வீரர் என்பதை கூறுவது அவசியம். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் இதனை வேடிக்கையாக கருதமுடியாது. என்ன நடந்தது என்பதையும், முக்கியமான விஷயம் என்பதால் அந்த வீரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறியவேண்டியது உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.