மெதுவான பந்துவீச்சு : இந்திய அணி வீரர்களுக்கு 80 சதவீத அபராதம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தலாக விளையாடி 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 88(64) ரன்களுடனும், கேதர் 26(15) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
348 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியில் நிக்கோல்ஸ் 78(82), லாதம் 69(48) ரன்கள் சேர்த்து அடித்தளம் அமைத்தனர். சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 109(84) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்து வெற்றியை பதிவு செய்தது. டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், ஒருநாள் தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று நியூசிலாந்து அணி அசத்தியுள்ளது. சதம் விளாசிய ராஸ் டெய்லர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், போட்டியில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் பந்துவீச எடுத்துக் கொண்டதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காத ஒவ்வொரு ஓவருக்கும் அந்த அணியின் வீரர்களுக்கு போட்டிக்கான சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
மொத்தம் 4 ஓவர்கள் மெதுவாக வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்திய அணி வீரர்களுக்கு தலா 80 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.