பங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்?
பங்களாதேஷூக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதையடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி, நவம்பர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி டெல்லியிலும் இரண்டாவது போட்டி, ராஜ்கோட்டில் நவம்பர் 7 ஆம் தேதியும் மூன்றாவது போட்டி நாக்பூரில் 10 ஆம் தேதியும் நடக்கிறது.
இந்த தொடருக்கான அணி தேர்வு வரும் 24 ஆம் தேதி நடக்கிறது. இந்திய கேப்டன் விராத் கோலி தொடர்ச்சியாக, விளையாடி வருவதால் பங்களாதேஷுக்கு எதிரான டி- 20 தொடரில், அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்ததும் இதுபற்றி தேர்வுக் குழுவினர் அவரிடம் பேச உள்ளனர். அவர் விருப்பப்பட்டால் மட்டுமே ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.