
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி தருவதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள முன்னணி வீரர்களுக்கு வருட சம்பளம் ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையும் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியை அடுத்த 5 வருடத்துக்கு ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் சுமார் 16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, முன்னாள் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயை சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பாக மீண்டும் பேச உள்ளனர்.
இதுபற்றி வினோத் ராய் கூறும்போது, ‘ சம்பள உயர்வு பற்றி 2 சுற்று பேச்சுவார்த்தையை முடித்து விட்டோம். இலங்கையுடன் நடக்கும் டெல்லி டெஸ்ட்டுக்கு முன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையும் நடத்திவிடுவோம்’ என்றார்.