''சிறுமைப்படுத்தாதீர்கள்; உற்சாகப்படுத்துங்கள்'' - ஸ்மித்துக்காக குரல் கொடுத்த கோலி
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்கு எதிராக இந்திய ரசிகர்கள் கூச்சலிட்ட நிலையில், அவரை உற்சாகப்படுத்துமாறு கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டதை பலர் சமூகவலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.
பலம் வாய்ந்த இரு அணிகள் மோதியதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்தப்போட்டியை மைதானத்துக்கு காணவந்த ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த அணிக்கும், வீரர்களுக்கும் ஆதரவாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில் விராட் கோலி களத்தில் இருக்கும் போது மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள், கோலிக்கு ஆதரவாகவும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித்தை சிறுமைப்படுத்தும் வகையிலும் கூச்சலிட்டனர்.
ரசிகர்கள் கூச்சலிடுவதை கவனித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ரசிகர்களை பார்த்து, ஸ்மித்தை கைத்தட்டி உற்காசப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். கோலியின் இச்செயலைக் கண்ட ஸ்மித், அவரை தட்டிக் கொடுத்து நன்றி தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த விராட் கோலி, ''என்றோ ஏதோ நடந்துவிட்டது. ஸ்மித் மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டார். அவர் அணிக்காக சிறப்பாக விளையாடுகிறார். பழைய கதைகளை கிளறி அவரை மீண்டும் சிறுமைப்படுத்தக் கூடாது. அது தவறு'' என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு எனக்கூறி பலரும் கேப்டன் விராட் கோலியின் வீடியோவை சமூகவலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.