ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 110 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கோலிக்கு இது 30-வது சதம் ஆகும். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். பாண்டிங் 30 சதத்தை 375 போட்டிகளில் அடித்து இருந்தார். ஆனால் கோலி 195 போட்டிகளில் எட்டியுள்ளார்.
அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் சாதனை முறியடிக்க கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவை.
இதனிடையே, விராட் கோலி இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். கோலி ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுப்பது இது 5-வது முறை ஆகும். 18 இன்னிங்ஸ்களில் விளையாடி ஆயிரம் ரன்கள் எடுத்தார். 16 இன்னிங்ஸ்களில் விளையாடி ஆயிரம் ரன்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது.