"ரசிகர்கள் மத்தியில் விளையாடுவதைப் போல வருமா?" ஐபிஎல் குறித்து விராட் கோலி கருத்து !
ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாடிப் பழகிவிட்டோம், அவர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடுவது வித்தியாசமாக இருக்கும் என்று ஐபிஎல் குறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ "நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படலாம் என்ற செய்தி மீண்டும் வெளியாகியுள்ளது. இது குறித்து கிரிக்கெட் கனக்டெட் என்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி "ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது சாத்தியம்தான். ஆனால் இதனை வீரர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை. என்னைப் போன்ற வீரர்கள் பலருக்கும் ரசிகர்களின் மத்தியிலே கிரிக்கெட் விளையாடிப் பழகிவிட்டது. அது ஒரு அலாதியான இன்பம். ரசிகர்களின் கூச்சல், உற்சாகம், அந்தப் பதைபதைப்பு, இந்த உணர்வுகள் எல்லாம் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் கிடைக்காது. அதனை உருவாக்கவும் முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர் "இவை எல்லாம் இல்லை என்றாலும் போட்டி நடைபெறும் என்றால் அது மறுப்பதற்கு இல்லை. ஆனால் ரசிகர்கள் மத்தியில் விளையாடும் போது நிகழும் மாயாஜாலம் எல்லாம் போட்டியின்போது நிகழுமா எனத் தெரியவில்லை. அதுபோன்ற உணர்வுகள் எல்லாம் என்ன செய்தாலும் வராது. கிடைக்கவும் கிடைக்காது" எனத் தெரிவித்துள்ளார் கோலி.