“தோனி என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்” - மனந்திறந்த விராட் கோலி
இந்திய அணியின் கேப்டனாக தான் திறம்படச் செயல்படுவேன் என தோனி மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசிவிடுகின்றனர்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தோனி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறும்போது, “தோனி எப்போதும் அனைத்து பொறுப்புகளைத் தானே எடுத்துக்கொள்வார். கேப்டனாக இருக்க வேண்டும் என்ற வெறித்தனமான கனவெல்லாம் அவருக்கு இல்லை.
நான் அணியின் 11 பேரில் ஒருவராக இருக்க வேண்டும் என்றே எப்போதும் நினைத்தேன். ஆனால் ஆட்டத்தின் போக்கு குறித்து நாம் கேப்டனுடன் பேசியாக வேண்டும். அந்த வகையில் தோனியிடம் தொடர்ச்சியாகப் பேசினேன். தோனி சொல்வதை எப்போதும் கேட்டுக்கொண்டிருந்தேன். நாங்கள் பல வித்தியாசமான கிரிக்கெட் தந்திரங்களை ஆலோசித்தோம். தோனி தனக்குப் பின்னர் ஒரு சிறந்த கேப்டனாக நான் செயல்படுவேன் என மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவரிடம் இருந்து கேப்டன் என்ற பொறுப்பைப் பெறுவதற்கு முன்பு, அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.