எல்லா புகழும் அனுஷ்காவுக்கே - வெற்றிக்கு பின் விராட் கோலி பேட்டி
இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் என்னுடைய சதத்தை மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு சமர்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 352 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.
முதல் இன்னிங்ஸில் 97, இரண்டாவது இன்னிங்ஸில் 103 என மொத்தம் 200 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றிக்கு பின்னர் விராட் கோலி பேசுகையில், “கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வெற்றியை சமர்பிக்கிறேன். மேலும், என்னுடைய இன்னிங்சை என்னுடைய மனைவிக்கும் தனிப்பட்ட முறையில் சமர்பிக்கிறேன். அவர் என்னை அதிக அளவில் ஊக்கப்படுத்தினார். என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் மட்டும் தான் என்னை பாசிடிவ் மனநிலையில் இருக்க வைப்பார்” என்று புகழ்ந்தார்.
முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த பின்னர் விராட் கோலி பேட் மூலம் பிளையிங் கிஸ் அடிக்க, கேலரியில் இருந்த அனுஷ்காவும் அதற்கு பதில் கிஸ் அடித்தார்.