'விராட் கோலிக்கு மனச் சோர்வு' போட்டுடைத்த ரவி சாஸ்திரி

'விராட் கோலிக்கு மனச் சோர்வு' போட்டுடைத்த ரவி சாஸ்திரி
'விராட் கோலிக்கு மனச் சோர்வு' போட்டுடைத்த ரவி சாஸ்திரி

ஆசியக் கோப்பையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதுக்கு அவருக்கு ஏற்பட்ட மனச் சோர்வே காரணம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டி20 தொடரை மற்றும் வென்ற இந்தியா, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தோல்வி கண்டது. இதனையடுத்து ஆசியக் கோப்பை போட்டி தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோகித் சர்மா அணியின் கேப்டனாக தொடரில் பங்கேற்றார். ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, 7 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் "ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு ஓய்வு அளித்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. கோலி ஆட்டத்தில் களம் இறங்கினால் ஆட்டத்தில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துவார் என்பது தெரியும்".

"ஆனால் அவருக்கு மனச் சோர்வு இருந்தது. அதனால் தான் ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த ஓய்வுக்கு பிறகு அவர் புத்துணர்ச்சியுடன் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்" என்றார். இந்திய அணியில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுமாறு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் உங்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் என்ற கேள்விக்கு ரவி சாஸ்திரி "ஒரு சில ஊடகங்களில் உங்களை பற்றி அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி விமர்சித்து இருக்கிறார் என்ற செய்திளை கவனித்துதான் வருகிறேன்".

"இது போன்ற செய்திகளை பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. படிப்பதும் இல்லை. எனக்கு தூங்குவதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது. நான் இப்போது நன்றாக தூங்குகிறேன். தேவைப்படும் போது ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் எனது கருத்துகளை பதிவிடுகிறேன். யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல் 100 சதவீதம் நம் வேலையை சரியாக செய்தால் போதும். இது போன்ற விமர்சனங்களால் கலங்கினால், அதன் பிறகு குழப்பம்தான் ஏற்படும்" என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com