"தோனி மூலமே சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது" - விராட் கோலி நெகிழ்ச்சி

"தோனி மூலமே சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது" - விராட் கோலி நெகிழ்ச்சி
"தோனி மூலமே சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது" - விராட் கோலி நெகிழ்ச்சி
'ஒரு இளம் வீரரால் மிக உயரமான சாதனையை எட்டிப்பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கை தோனி மூலம் கிடைத்தது' என்று குறிப்பிட்டுள்ளார் விராட் கோலி.
கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை முதன் முறையாக இந்தியா வென்றது. அந்த தொடரில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான அதிக அனுபவம் இல்லாத இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை வென்றதை யாராலும் மறக்க முடியாது. அந்த தொடரில் மூத்த வீரர்களான கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், பங்கேற்கவில்லை. சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற அனுபவ வீரர்களுடன் அதிக இளம் வீரர்கள் கொண்ட அணி தோனி தலைமையில் களமிறங்கி உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் 2007 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது குறித்து நினைவுகூர்ந்த விராட் கோலி, ''அந்த உலகக் கோப்பையை நாங்கள் மகிழ்ச்சியுடன் நினைவில் கொள்கிறோம். இந்திய அணியின் வெற்றி எதிர்பாராதது என்று கூறமாட்டேன், ஆனால் டி20 ஆட்டங்களின் வடிவத்தைப் பற்றி அப்போது யாருக்கும் உண்மையில் தெரியாது. டி-20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு, ஐபிஎல் தோற்றம் கிரிக்கெட்டை முற்றிலும் மாற்றியது.
2007 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையின் போது அணியின் கேப்டனாக இருந்த தோனியின் வயது 26. டி-20 கிரிக்கெட்டில் அணியின் வெற்றியின் தாக்கம் பிற்காலத்தில் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டாலும், ஒரு இளம் வீரரால் மிக உயரமான சாதனையை எட்டிப்பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கை தோனி மூலம் கிடைத்தது. இப்போது தோனி எங்களுடன் இருப்பது தனிப்பட்ட எங்களுடைய நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. குறிப்பாக இளம் வீரர்கள் தற்போது முதல் முறையாக பெரிய தொடரில் விளையாட இருக்கும்போது தோனியைப் போன்ற ஒரு பெரிய ஜாம்பவான் அணியின் ஆலோசகராக இருப்பது அவர்களுக்கு நிச்சயம் உதவும். என்னை பொருத்தவரை இந்த தொடரில் இந்திய அணி தங்களது 100 சதவீத ஈடுபாட்டையும் கொடுக்கும். எங்களுடைய நம்பிக்கையையும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது' என்றார்.
2016-ம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகள் இடைவெளியில் இன்று முதல் 7-வது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகிறது. குரூப் சுற்றுப் போட்டிகள் வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 24ம் தேதி தொடங்குகின்றன. 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆலோசகராக இந்திய அணி முன்னாள் கேப்டனான டோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com