கணித பாடத்தில் தேர்ச்சி பெற கிரிக்கெட்டை விட அதிகம் உழைத்தேன் - விராட் கோலி
கிரிக்கெட்டை விட கணித பாடத்திற்கு அதிகமாக உழைத்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட்டு வலைதளத்தின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் கிரிக்கெட் குறித்தும் தனது பள்ளி பருவம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கு பின் என்னுடைய உடற்தகுதியில் அதிகமாக கவனம் செலுத்தினேன். அத்துடன் அன்று முதல் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
என்னுடைய பள்ளி பருவத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டது கணக்கு பாடத்தை படிக்க தான். குறிப்பாக பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் தேர்ச்சி பெற மிகவும் உழைத்தேன். அந்த அளவிற்கான உழைப்பை இதுவரை நான் கிரிக்கெட் வாழ்க்கையில் கூட செய்தது இல்லை. பொதுவாக கணித பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு நான் 3 மதிப்பெண் எடுப்பேன். எனக்கு கணித பாடம் எளிதாக புரியாது. ஆகவே தான் எப்படியாவது பத்தாவது வகுப்பை முடிக்க வேண்டும் என்று கருதி கடினமாக உழைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.