இலங்கை வீரர்களை அதிரடியால் சோதித்த முரளி-கோலி ஜோடி: இந்தியா 371/4

இலங்கை வீரர்களை அதிரடியால் சோதித்த முரளி-கோலி ஜோடி: இந்தியா 371/4
இலங்கை வீரர்களை அதிரடியால் சோதித்த முரளி-கோலி ஜோடி: இந்தியா 371/4

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. முரளி விஜய், விராட் கோலி 150 ரன்கள் குவித்தனர்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முரளி விஜய்யும் தவானும் களமிறங்கினர். தவான், அவரை அடுத்து வந்த புஜாரா இருவரும் தலா 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனையடுத்து, முரளி விஜய் உடன் கேப்டன் விராட் கோலி. இறங்கியது முதல் ஒருநாள் போட்டியைப் போல் கோலி பவுண்டரிகளை விளாசி ரன்களை குவித்தார். அதேபோல் முரளி விஜயும் சீரான இடைவெளியில் ரன்களை அடித்து அவருக்கு ஒத்துழைப்பு தந்தார். 52 பந்துகளில் கோலி அரைசதம் விளாசினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் 163 பந்துகளில் சதம் அடித்தார். இலங்கை பந்துவீச்சாளர்களை அதிரடியால் மிரட்டிய கோலி 110 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இருவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர். 

இதனையடுத்து முரளி விஜய் 251 பந்துகளிலும், கோலி 178 பந்துகளிலும் 150 ரன்களை எட்டினர். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 82.2 ஓவர்களில் இந்திய அணி 350 ரன்களை கடந்தது. முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 267 பந்துகளில் 155 எடுத்திருந்த நிலையில் முரளி விஜய் ஸ்டம்பிங் ஆனார். அதேபோல் ரகானேவும் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து இந்தப் போட்டியிலும் ஏமாற்றினார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 156(186), ரோகித் சர்மா 6(14) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் சண்டகன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விராட் கோலிக்கு டெஸ்ட் போட்டியில் 20-ஆவது சதம் ஆகும். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com