இன்று தொடங்குகிறது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா: கேப்டன்களுக்கு இங்கி. ராணி விருந்து!
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா, இங்கிலாந்தில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு, கிரிக்கெட் அணி கேப்டன்களுக்கு இங்கிலாந்து ராணி விருந்து வைத்தார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இன்று தொடங்குகிறது. ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலக கோப்பைப் போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.
இந்த உலக கோப்பையில், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குச் செல்லும். முதல் நாளான இன்று, இங்கிலாந்து அணி- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக, இங்கிலாந்து ராணி எலிசபெத், உலகக் கோப்பையில் பங்குபெறும் கிரிக்கெட் அணி கேப்டன்களுக்கு நேற்று விருந்து வைத்தார். பக்கிங்காம் அரண்மனையில் நடந்த இந்த ’கார்டன் பார்ட்டி’யில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது உட்பட 10 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டனர்.
இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் ஹாரி மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். ராணி எலிசபெத் கிரிக்கெட் கேப்டன்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப் படங்களை அரண்மனை நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.