இந்திய தந்தைகளுக்கு பேறுகால விடுப்பு... கோலி மட்டும் விமர்சிக்கப்பட்டது ஏன்?!

இந்திய தந்தைகளுக்கு பேறுகால விடுப்பு... கோலி மட்டும் விமர்சிக்கப்பட்டது ஏன்?!
இந்திய தந்தைகளுக்கு பேறுகால விடுப்பு... கோலி மட்டும் விமர்சிக்கப்பட்டது ஏன்?!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி சார்பில் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கேற்றார் கேப்டன் விராட் கோலி. அதற்கடுத்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. தனக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்தியா திரும்பினார். அவருக்கு பிசிசிஐ விடுப்பு கொடுத்தது. இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் "கோலி எவ்வாறு தேசிய கடமையை தவிர்க்க முடியும்?" என்று கேள்வி எழுப்பி விமர்சித்தனர். அதேநேரத்தில், சிலர் கோலியின் முடிவை பாராட்டவும் செய்தனர்.

"கோலி ஓர் உலகத் தரத்திலான கிரிக்கெட் வீரர். அவர் டெஸ்ட் தொடரில் இல்லாதது இந்தியாவுக்கு பேரிழப்புதான். ஆனால், கிரிக்கெட் மட்டுமே கோலிக்கு வாழ்க்கையில்லை. கிரிக்கெட்டை தவிர்த்து அவருக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவருடைய குடும்ப வாழ்க்கை இப்போதுதான் தொடங்க இருக்கிறது. ஆஸ்திரிலேியாவுக்கு எதிராக விளையாடுவதை அவர் எப்போதும் விரும்புவார். அப்படிப்பட்ட நபர் விலகுகிறார் என்றால், அவரை நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்" என்று ஸ்டீவ் ஸ்மித் போன்றார் கோலிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருந்தது. காரணம் பிசிசிஐயின் பாரபட்சம்.

கோலியை போலவே இந்திய அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன், உமேஷ் யாதவ் முதலானோரும் தந்தையாகி இருந்தனர். ஆனால் அணியில் இடம்பெற்றதால் அவர்கள் நாடு திரும்பவில்லை. பிசிசிஐயும் அவர்களைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதனால்தான் அவர் மீது அதிகப்படியான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இதனை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 'ஸ்போர்ட் ஸ்டார்' பத்திரிகைக்கு, தான் எழுதிய கட்டுரையில், ``ஐ.பி.எல் ப்ளே ஆஃப் சுற்றுகளின்போது, நடராஜன் தந்தையானார். ஐபிஎல் போட்டிகள் நடந்த யுஏஇ-லிருந்து அவர் இந்தியா திரும்பாமல், அப்படியே ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். அந்த அளவுக்கு தன்னுடயை அர்ப்பணிப்பை செலுத்தினார். அதேபோல டி20 போட்டிகளில் நல்ல பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தினார். அவருடைய மிரட்டலான ஆட்டத்தைப் பார்த்து, அவரை டெஸ்ட் போட்டிகளில் இருக்கச் சொல்லி தங்கவைத்தனர். போட்டிகளில் விளையாடுவதற்கல்ல, நெட் பவுலராக இருப்பதற்கு அவர் அங்கேயே தங்கவைக்கப்பட்டார்.

கற்பனை செய்து பாருங்கள். ஒரு மேட்ச் வின்னர், இன்னொரு வகையான ஆட்டத்தில் நெட் பவுலராக இருக்கிறார். ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இந்தத் தொடர் முடிந்த பிறகு, அவர் தனது மகளை முதல்முறையாக பார்ப்பதற்கு நாடு திரும்ப இருக்கிறார். ஆனால், கேப்டனோ முதல் டெஸ்ட் போட்டி முடிந்த கையுடன், தனது முதல் குழந்தையைப் பார்க்கச் சென்றுவிட்டார். இதுதான் இந்திய கிரிக்கெட் வாரியம். ஒருத்தருக்கு ஒருவகையாகவும், மற்றொருத்தருக்கு மறுவகையான விதிகள். நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நடராஜனைக் கேட்டுப்பாருங்கள்" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

கோலி மட்டும் குழந்தையை பார்க்க வேண்டும் என்று விடுப்பு எடுக்கவில்லை. ரோஹித் சர்மா தனக்கு மகள் பிறந்தபோது தனது மனைவியுடன் இருக்க ஒரு போட்டியைத் தவிர்த்திருந்தார். கவுதம் கம்பீர் குழந்தை பிறந்தபோது போட்டியை தவிர்த்திருந்தாலும், அடுத்த சில நாட்களில் அடுத்த போட்டிக்காக அணியுடன் இணைந்தார். அதேநேரத்தில், கங்குலி கேப்டனாக தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடியபோது அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், போட்டியின் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர் குழந்தையை சந்திக்கவில்லை. எம்.எஸ். தோனியின் மகள் 2015 உலகக் கோப்பைக்கு முன்னதாக பிறந்தபோதும் இதேதான். அவரால் உடனடியாக குழந்தையை சந்திக்க முடியவில்லை.

இந்த வீரர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் விடுப்பு எடுக்கவில்லை என்பது தெரிந்ததே. அவர்கள் விடுப்பு கேட்கவில்லையா, அல்லது பி.சி.சி.ஐ கொடுக்க மறுத்ததா என்பது தொடர்பான தெளிவான தகவல் இல்லை. ஆனால், கோலியின் எடுத்த விடுப்பு இதுவரை பெரும்பாலான இந்திய கிரிக்கெட் வீரர்கள் எடுத்ததை விட நீண்டது. அதற்கு காரணம், கோவிட் தனிமைப்படுத்தலின் காரணமாக நீண்ட நாள்களுக்கு முன்பே அவர் இந்தியா திரும்ப வேண்டி இருந்தது. எனினும், இந்த சர்ச்சை இரண்டு முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. ஒன்று, இந்தியாவில் பேறுகால விடுப்பு குறித்து சட்டம் என்ன கூறுகிறது. இரண்டு, அதற்கான சமூக அணுகுமுறை எப்படி இருக்கிறது?

பேறுகால விடுப்பு தொடர்பான சட்டம்:

மத்திய அரசு ஊழியர்களில் ஒரு ஆண் அரசு ஊழியர் குழந்தை பிறக்கும் 15 நாட்களுக்கு முன்னர் அல்லது ஆறு மாதங்கள் வரை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், தனியார் துறையில் இந்த விதி கட்டாயமில்லை. இந்தியாவில் Ikea நிறுவனம் இது மாதிரியான விடுப்புகளை தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. ஜொமாடோ 2019 ஆம் ஆண்டில் தனது ஆண் ஊழியர்களுக்கு 26 வார பேறுகால விடுப்பு வழங்க முடிவு செய்து செய்தி வெளியிட்டது. பெண்களைப் பொறுத்தவரை, 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களின் பெண் தொழிலாளர்கள் 26 வார ஊதிய விடுப்பு எடுக்கலாம் என்று சட்டம் சொல்கிறது.

ஆண்களுக்கு பேறுகால விடுப்பு கிடைக்காததால் புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பை தந்தைகள் இழக்கிறார்கள் என்று பல ஆண்டுகளாக, பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். மேலும் குழந்தை பராமரிப்பின் பெரும்பகுதி தாய்மார்கள் நியாயமற்ற முறையில் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பெண்களை அதிக அளவில் வேலை அமர்த்துவதை விட ஆண்களை வேலைக்கு அமர்த்துவது நிறுவனங்களுக்கு சாதகமாக அமைகிறது.

பாலின சமத்துவத்திற்காக பணிபுரியும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ப்ரோமுண்டோ என்ற அமைப்பு 2019-ல் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அவர்கள் ஆய்வு செய்த 187 நாடுகளில், 90 நாடுகளில் சட்டரீதியான ஊதியம் பெற்ற பேறுகால விடுப்பு ஆண்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியா அது மாதிரியான விடுப்பு கொடுக்கப்படுவதில்லை. இதற்கு ஒரு காரணம், சமூக ரீதியாக, குழந்தை வளர்ப்பு என்பது இந்தியாவில் ஒரு பெண்ணின் பொறுப்பாகவே கருதப்படுகிறது, ஆகவே, நிறுவனங்கள் ஆண்களுக்கு நீண்ட விடுப்புகளை கொடுப்பதில்லை.

2016 ஆம் ஆண்டில், தந்தைகளுக்கும் பேறுகால விடுப்பை சட்டபூர்வமாக பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது, அப்போதைய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ``நான் அதைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவேன், ஆனால் ஒரு மனிதனுக்கு இது ஒரு விடுமுறை மட்டுமே. அவரால் குழந்தைக்கு எதுவும் செய்ய முடியாது" என்றார். எனினும் கோரிக்கைகள் வலுப்புற்று 2017 ஆம் ஆண்டில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சதாவ் இதற்கான மசோதாவை சமர்ப்பித்தார். இது அனைத்து துறைகளிலும் சமமான மகப்பேறு மற்றும் ஆண்களுக்கான பேறுகால விடுப்புகளை முன்மொழிந்தது.

ஆனால் அதன்பிறகு அந்த மசோதாவின் எந்த முன்னேறமுமில்லை. இதே ப்ரோமுண்டோவின் அறிக்கையில், இந்தியாவில் 80 சதவீத ஆண்கள், குழந்தைகளின் துணிகளை மாற்றுவது, குளிக்க வைப்பது மற்றும் உணவளிப்பது ஒரு பெண்ணின் வேலை என்று கூறியுள்ளனர். கோலியின் முடிவுக்கான சமூக ஊடக எதிர்வினைகளிலும் இந்த அணுகுமுறை பிரதிபலிக்கிறது. கோலி ஒரு பிரபல நபராக இருப்பதால் இந்த விமர்சனம் பெரிதாக்கப்படுகிறது. ஆனால், குழந்தையை தந்தைகளுக்கு உரிமை இருக்கிறது. எனவே, இதில் எந்த தவறும் இல்லை. இது மாதிரியான விஷயங்களில் விமர்சிப்பது அற்பமானது மற்றும் தேவையற்றது என்று பலர் கருத்து கூறியுள்ளனர்.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Indian Express

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com