“கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி” - கிரேம் ஸ்மித் புகழாரம்
கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக விராட் கோலி திகழ்வதாக தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா சென்று மூன்று டி 20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தும் என கிரேம் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜக்மோகன் டால்மியாவின் வருடாந்திர சந்திப்பில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் கிரேம் ஸ்மித் கலந்து கொண்டார். அதில் அவர் தற்போதைய கிரிக்கெட்டின் நிலவரம் குறித்து பேசினார். அதில் ''கிரிக்கெட் உலகில் பெரிய சூப்பர் ஸ்டார்கள்
குறைந்த அளவே இருக்கிறார்கள். அதில் ஓரிரண்டு பேர் இங்கிலாந்து அணியில் இருக்கிறார்கள். இந்திய அணி வீரர் விராட் கோலியும் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அழிந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் போன்ற சூப்பர் ஸ்டார்களால் தான் மீட்டெடுக்க முடியும். ஐபிஎல், டி20 போன்ற போட்டிகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் விராட் கோலி கொடுத்து வருகிறார். இது ரசிகர்களையும் கவரும். அவர்களை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க இது தூண்டும்'' என்று தெரிவித்தார்.
மேலும் ''தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இந்திய அணி இழந்துவிட்டது. அது அவர்களுக்கு ஒரு சறுக்கல் இல்லை. இந்திய அணியால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். இந்திய அணி கிரிக்கெட்டின் எல்லா பக்கங்களிலும் பலமாக உள்ளது. இந்திய அணியில் உள்ள இளம் வீரரகள் எதிரணி வீரர்களை துவம்சம் செய்கின்றனர்'' என்று தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது உலகிலேயே அதிவேகத்தில் 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.